உலகில் சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தை எட்டி உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்
சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கைபடி இலங்கை இவ்வாறு பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் அடுத்த வருடம் இரண்டாம் இடத்தை இலங்கை அடைய முடியும் என்றும் அமைச்சர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையும் சீனாவும் தவிர்ந்த எல்லா நாடுகளதும் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான செய்தியாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்தும் ஒரே நிலையிலேயே பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதற்கு நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன.
2010ம் ஆண்டு நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியை விடவும் 2011ம் ஆண்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெரிதும் குறைவடைந்து காணப்பட்டன. எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதன் பயனாக இக்காலப் பகுதியில் சராசரியாக நான்கு பேர் வாழக் கூடிய ஒவ்வொரு குடும்பமும் இருநூறு முன்னூறு ரூபாவை மீதப்படுத்தக் கூடியதாக இருந்தது.
2009ம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து நாம் கோழி இறைச்சியை இறக்குமதி செய்தோம். இப்போது கோழி இறைச்சியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக் கூடியளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றோம்.
2010ம் ஆண்டில் நாம் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்தோம் இன்று வெளி நாட்டுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யக்கூடியளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளோம். இதனடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சோமாலியா நாட்டுக்கு
7500மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சோமாலியாவுக்கென கொழும்பு துறைமுகத்தில் தற்போது அரிசி ஏற்றப்படுகின்றது.
உல்லாசப் பயணிகளின் வருகை முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகாரித்துள்ளது. வேலையின்மை பணவீக்கம் என்பன குறைவடைந்துள்ளன. தலா வருமானம் அதிகரித்துள்ளது. டொக்டர்கள்இ தாதியர் உட்பட முழு சுகாதார சேவையும் மேம்பட்டுள்ளது. வீதிகள் மின் மற்றும் குடிநீர் வசதி உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகளுமே வளர்ச்சி அடைந்துள்ளன.
இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் எல்லா நாடுகளதும் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்துள்ளது. ஆனால் இலங்கை உலகில் நாலாவது சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இப்போதுள்ளது. அடுத்த வருடம் இரண்டாமிடத்தை அடைய முடியுமென எதிர்பார்க்கின்றோம்.
ஆனால் சீனா முதலிடத்தில் உள்ளது என்றார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் நிதியமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர தகவல் ஊடக அமைச்சின் செயலாளர் டப்ளியூ. பி. கணேகல அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் நாயகம் பேராசிரியர் ஆரியசேன அத்துகல மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
Source: அரச தகவல் திணைக்களம்