புதுடில்லி: ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் இந்திய வீரர் யுவராஜ் சிங் விளையாட மாட்டார் என தெரிகிறது. ஐந்தாவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடர், சென்னையில் ஏப். 4ம் தேதி துவங்குகிறது. இதில் கடந்த தொடரின் போது, புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் செயல்பட்டார். சமீபத்தில் இவருக்கு நுரையீரலில் கட்டி ஏற்பட்டது. இது "கேன்சர்' கட்டி இல்லை என கூறப்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஆறு மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் உள்ளார்.
இது குறித்து வெளியான செய்தியில்,""யுவராஜ் சிங் தற்போது, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறதா, அல்லது வேறு ஏதாவது வகையிலான சிகிச்சை பெற போகிறாரா என்று தெரியவில்லை. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலம் எப்போது: ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்களின் ஏலம் வரும் பிப். 4ம் தேதி பெங்களூருவில் நடக்க உள்ளது. இது குறித்து ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,""ஐ.பி.எல்., போட்டியினை இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல், வெளிநாட்டு ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த போட்டியும் அமையும் என்று உறுதியளிக்கிறேன்,'' என்றார்.