அமெரிக்காவில்
இண்டியானா மாகாணத்தில் உள்ள 7 வயது சிறுவன் ஒருவனுக்கு தீயணைப்பு
வீரனுக்கு அளிக்கப்படும் கௌரவம் வழங்கப்பட்டது குடும்பத்தையே மகிழ்ச்சி
கடலில் ஆழ்த்தியது.
அமெரிக்காவின் இண்டியானா மாநில தலைநகர் இண்டியானாபோலீசில் வசிப்பவர் கிரேக் வின்சன். தீயணைப்பு வீரராக பணியாற்றுகிறார். இவருடைய 7 வயது மகன் பிராடன் வின்சன்.
தந்தையை போலவே தீயணைப்பு வீரனாக வேண்டும் என்பது இவனுடைய கனவு. சிறுவனின் தாத்தா, மாமா, சித்தப்பா என்று குடும்பமே தீயணைப்பு வீரர்கள் என்பதால், தானும் அதுபோல் ஆகவேண்டும் என்று விரும்பினான்.
ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை என்று தெரிந்து குடும்பத்தையே வேதனையில் ஆழ்த்தியது. வின்சனுக்கு சிஸ்டிக் பிப்ரோசிஸ் என்று டாக்டர் சொன்னபோது குடும்பத்தினருக்கு அந்த நோயின் கோரம் தெரியவில்லை. ஆனால அந்த நோய் ஏற்படுத்தப் போகும் விளைவுகளை டாக்டர்கள் அளித்த விளக்கங்களை கேட்டு பதறியது குடும்பம்.
அரிய வகை நுரையீரல் நோய் அது. மரபணு கோளாறால் உயிருக்கு ஆபத்தான இந்நோய் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மூச்சுக்குழாய் பாதிப்பால் சாப்பிடுவதில் சிக்கல் இருக்கும்.
இதனால் ஜீரண கோளாறு, வயிற்று வலி என பல பிரச்னைகள் ஏற்படும். பரம்பரையாக வரும் நோய் இது. நுரையீரலில் பசை போன்ற திரவம்(மியூக்கஸ்) சுரக்கும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கணையத்தையும் இது பாதிக்கும். உடலின் பல பாகங்களில் பிரச்னை ஏற்படும். இந்த நோய் தாய், தந்தை இருவரிடம் இருந்தும் கிடைக்கப்பெறும் பாதிக்கப்பட்ட ஒரு ஜீன் சேர்க்கையால் உருவாகிறது என்பதே டாக்டர்களின் கண்டுபிடிப்பு.
வியர்வை சுரப்பிகள், ஆண்மை ஆகியவற்றையும் சிஸ்டிக் பிப்ரோசிஸ் பாதிக்கும். லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
வின்சனுக்கு 2 வயதாக இருக்கும் போதே இந்த நோய் பாதிப்பு குறித்து தெரிய வருகிறது. குழந்தை பிறந்தவுடன் எடை குறைவாக இருந்தால், நாளடைவில் வளர்ச்சி இல்லாமை, மலச்சிக்கல், வயிற்று வலி, வயிறு பெருத்து காணப்படுதல், சளி, ஜூரம் போன்ற பாதிப்புகள் இருக்கும்.
இதை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் வாரத்துக்கு 3 முறை உடற்பயிற்சி, நீச்சல், ஜாக்கிங், சைக்கிளிங் போன்றவை இந்நோய் பாதிப்பை குறைக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். எனினும், சிஸ்டிக் பிப்ரோசிஸால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் 37 ஆண்டுகள்தான் என்பது கொடுமை.
இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள வின்சனால் தீயணைப்பு வீரனாக முடியாது. தாத்தா, தந்தையை போல தீயணைப்பு வீரனாக முடியாதே என்ற ஏக்கத்தில் தினமும் வின்சன் புலம்பி வந்தான்.
இதை அறிந்த இண்டியானாபோலிஸ் சட்டசபை பிரதிநிதிகள், சிறுவனுக்கு கவுரவ தீயணைப்பு வீரன் பதவி வழங்க தீர்மானம் நிறைவேற்றினர்.
கௌரவ பதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் தலை கவசத்தை சிறுவனுக்கு அணிவித்து கவுரவப்படுத்தினர். அத்துடன், தீயணைப்பு வீரருக்கான பதக்கம், சான்றிதழும் வழங்கப்பட்டது.
சட்டசபையில் சிறுவனை மேசை மீது நிற்க வைத்தனர். தொப்பியை சிறுவன் அணிந்து மகிழ்ச்சி பொங்க அனைவரையும் பார்த்து சிரித்தான். அப்போது பிரதிநிதிகள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து அவனை உற்சாகப்படுத்தினர்.
அப்போது சிறுவனும் அவனது தந்தை கிரேக்கும் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கதறி அழுதனர். என் மகனின் கனவு நனவானது. அதற்காக இண்டியானா சட்டசபை பிரதிநிதிகளுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கிரேக் குரல் தழுதழுக்க கூறினார்.
வின்சனின் குடும்பத்தினர் மட்டுமின்றி உறவினர்களும், தீயணைப்பு வீரர்களும் கண்களில் நீர்மல்க நெகிழ்ச்சியுடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.