பழுதடைந்த ரூபா நோட்டுக்களை சுழற்சிக்கு விடுவதை தவிர்க்கும் நட வடிக்கையில் இலங்கை மத்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொதுச் சந்தைகள் மற்றும் பொருளாதார நிலையங்கள் போன்ற இடங்களில் மக்களிடம் நேரடியாகச் சென்று பழுதடைந்த ரூபா நோட்டுக்களை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரூபா 10, 20, 50 நாணயத்தாள்கள் வாபஸ் பெறப்பட்டு புதிய நாணயத் தாள்கள் வழங்கப்படுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். சிறிய இடங்களில் வங்கி முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதில்லையெனவும் அதிகாரிகள் அந்த இடங்களுக்கு நகர்த்தப்பட்டு பழுதடைந்த ரூபா நோட்டுக்களை நேரடியாக மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார்.
பழுதடைந்த நாணயத்தாள்கள் கிரமமாக மக்கள் மத்தியில் செல்கின்றன. ஆனால், அவை வங்கி முறைமையை சென்றடைவது அபூர்வமாகக் காணப்படுகின்றது என்று கூறிய கப்ரால், வர்த்தக வங்கிகள் இதனைச் செய்ய முடியுமென நாம் எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். பழுதடைந்த நாணயத் தாள்களை சுழற்சியில் விடுவது நாட்டின் பிரதிமைக்கு நல்லதல்ல என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். பழுதடைந்த நாணயத்தாள்களை வைத்திருப்பதை உல்லாசப் பயணிகள் விரும்புவதில்லை.
புதிய நாணயத்தாள்களை வைத்திருப்பதை மத்திய வங்கி கொள்கையாகக் கொண்டுள்ளது. காலத்துக்குக் காலம் நல்ல ரூபா நோட்டுக்களை வைத்திருப்பது அவசியம் என்பது பற்றி மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பழுதடைந்த நாணயத்தாள்களை வைத்திருப்பது குற்றச் செயலாகும்.