நீர்கொழும்பில் டெங்கு தீவிரம்

 நீர்கொழும்பு நகரில் டெங்குக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நீர்கொழும்பு நகரின் தெஹிவத்தை, உடையார் தோப்பு,லாஸரஸ் வீதி, வடக்கு பிட்டிபனை, நெடுவல்வத்த, தம்மிட்ட வீதி, பிரதான வீதி, கடோல்கலே, சூரண ஆகிய பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையானோர் டெங்கினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஆண்கள் வார்டில் 28 பேரும், பெண்கள் வார்ட்டில் 22 பேரும் இந் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தும் பிரிவின் பதிவுகளின் பிரகாரம் கடந்த வருடம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 711 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 201 பேருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 104 பேர் நீர்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பிரதேசத்திற்குட்பட்ட (MOA) டெங்கு நோயாளிகளாவர். கடந்த டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையானவர்கள் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் டெங்குக் காய்ச்சலுக்காக சிகிச்சையளிக்கப்பட்டவர்களில் 10 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 125 ஆகும்.

இதேவேளை கடந்தவாரம் நீர்கொழும்பில் ஆறரை வயதான சிறுவன் ஒருவன் டெங்கினால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவியமை குறிப்பிடத்தக்கது.
___
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now