பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆரவளிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் விசேட புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோருக்கு தண்டனை வழங்கப்படாத வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
சில வெளிநாட்டு சக்திகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருவதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விமானங்களை தரையிறக்குதல் துறைமுகங்களுக்கு பிரவேசித்தல் போன்ற வசதிகளை இலங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆட்சி செய்த காலத்தில் அமெரிக்காவுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களான மிலிந்த மொரகொட மற்றும் ஜீ.எல்.பீரிஸ்ஆகியோரும் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.
எவ்வாறெனினும், இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடர்வது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் இதுவரையில் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.