காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம்! முன்னெல்லாம், நாம் படிக்கும் காலங்களில், ஆசிரியர்கள், ஏதேனும் கதை அல்லது கட்டுரைகள் எழுதி வர பணிப்பார்கள். நாமும் மெனக்கெட்டு நூலகம் சென்றோ அல்லது அறிவு சற்று கூடிய பெரிசுகளிடமோ போய் விபரத்தை சொல்லி குறிப்பெடுத்து நம் கட்டுரைகளை வகுப்பில் சமர்ப்பிப்போம்.
ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் இவையெல்லாம் தொலைந்து …. ‘ஒரு விஷயம் தெரியலையா?’ … ‘கூகிள் போ! …. அங்கு எல்லாம் கிடைக்கும்!!’ என்று சொல்லுமளவுக்கு ஆகி விட்டது. இணையத்தில் நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் கலந்தே தான் உள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்களை இணையத்தில் பார்ப்பதினால் குறிப்பிட்ட அந்த கல்விக்கானதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். Google – தனது YouTube சேவையில் பள்ளி மாணவர்களுக்காக சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருப்பது பற்றிதான் இப்பதிவு.
Youtube for Schools என்ற இப் பிரிவின் கீழ் பள்ளி மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்து பயன்பெறலாம். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான Google கணக்கொன்றை உருவாக்கி, தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம்.
YouTube -இல் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொண்டு, இவற்றின் மூலம் மொழிகள், கணிதம், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்ற பலவற்றை மாணவர்கள் கற்று பயன்பெறலாம்.
பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், YouTube -இல் உள்ள, எந்த வீடியோவினையும் பார்க்க இயலும். ஆனால், மாணவர்கள் Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களையும், தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே கருத்துரையும் வராது; Related Videos என்பதும் வராது.
எப்படித் தேடினாலும் பாடங்கள் குறித்த வீடியோக்கள் மட்டுமே வரும். இந்த சிறப்பம்சம் மாணவர்கள் மற்ற ஏதேனும் வீடியோக்களைப் பார்க்க தடுப்பதோடு அவர்களின் கவனம் சிதறடிக்கப்படாமலும் இருக்க உதவுகிறது.
பள்ளி ஆசிரியர்களுக்காகவே Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் பல பள்ளிகளில் பணிபுரியும் சகஆசிரியர்களின் பாட வீடியோக்கள் தரவேற்றம் செய்யப் பட்டுள்ளதால், (மற்ற) பள்ளி ஆசிரியர்களும் இவற்றைப் பார்த்து தமது அறிவையும் மேம்படுத்திக்கொள்ளலாம் .
மேலும், குறிப்பிட்ட பள்ளியில் தரவேற்றப்பட்டு இருக்கின்ற வீடியோக்களை, அந்த பள்ளி மட்டுமே பார்க்கும்படியாகயும் அமைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் வளர்க்கும் YouTube -இன் இச்சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றே!