மேற்கு மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானின் சொந்த ஊரான கராத் என்ற கிராமத்தில் உயர் ஜாதியைச் சேர்ந்த 5 பேர் 42 வயது தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற கொடுமை நடந்துள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானின் சொந்த ஊர் கராத். அங்கு கடந்த 9ம் தேதி மதியம் மூல்காவ் கிராமத்தைச் சேர்ந்த உயர் ஜாதியினர் 5 பேர் 42 வயது தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு உயர் ஜாதிப் பெண் ஒருவர் அந்த தலித் பெண்ணின் மகனுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உயர் ஜாதியினர் சதாரா மாவட்டத்தின் கராத் தாலுகாவில் வசித்து வந்த அந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த தாய் கூறியதாவது,
எனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது போன்று நடப்பதெல்லாம் சகஜம். அதற்காகவெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.
சில பெண்கள் என்னை தரையில் தள்ளிவிட்டனர். பிறகு எனது சேலையை உருவிவிட்டு என்னை செருப்பு மற்றும் கம்பால் அடித்தனர். எனது முடியைப் பிடித்து இழுத்தனர். இந்த கொடுமை சுமார் 2 மணிநேரம் நீடித்தது என்றார்.
இதனால் படுகாயம் அடைந்த அவரை தலித் அமைப்பைச் சேர்ந்த சிலர் கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து அவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதற்காக ஊரை விட்டு ஓடிய பெண்ணின் பெற்றோர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.