ஐந்து வகையான தானிய இறக்குமதியை நிறுத்தத் தீர்மானம்:அரசாங்கம் அறிவிப்பு


ஐந்து வகையான தானியங்கள் இறக்குமதி செய்யப்படுவதை இந்த வருடம் முதல் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 

இந்த நடவடிக்கையின் மூலம் பெருந்தொகை அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குரக்கன், உளுந்து, எள்ளு, சோளம் மற்றும் நிலக்கடலை ஆகிய ஐந்து வகையான தானியங்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் டப்ளியூ.ஏ.சகலசூரிய குறிப்பிட்டார்.

இந்தப் பயிர் வகைகளின் உற்பத்தியை தேசிய ரீதியில் உயர்த்துவதற்கு தேவையான பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சோளப் பயிர்ச்செய்கை உயர்வடைந்துள்ளதாகவும், உற்பத்தி அதிகரிப்பின் பின்னர் வரியை அதிகரித்து இறக்குமதியை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என டப்ளியூ.ஏ.சகலசூரிய குறிப்பிட்டார்.

அத்துடன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிய பயிர்நிலங்களை உருவாக்குதல், இடைக்கால அறுவடை முறையை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தில் கோதுமை மற்றும் தானிய வகைகளின் இறக்குமதிக்காக 29,120 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக 2010 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் மொத்த இறக்குமதியில் நூற்றுக்கு ஒன்று தசம் ஒன்பது வீதமாகும்.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தினூடாக நிலக்கடலை மற்றும் உளுந்து ஆகிய தானியங்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக அத்தியவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் மற்றும் வர்த்தக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தானிய வகைகளுக்கான இறக்குமதி நிறுத்தப்படுவதற்கு முன்னர் அவற்றின் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறில்லாத பட்சத்தில் விலை அதிகரிப்பு காரணமாக சிறு கைத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now