தனது உயரதிகாரி ஐந்து ஈராக்கிய பொது
மக்களை கொன்றதாகவும் அதனை பற்றிய உணமைத்தகவல்களை மறைக்குமாறு தனக்கு
உத்தரவிடப்பட்டதாகவும் ஈராக் ஆக்கிரமிப்பில் பங்கு பற்றிய இராணுவ வீரர் அமெரிக்க இராணுவ நீதிமன்றில் சாட்சியமளித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஈராக்கின் ஹதித் நகரில்
ஏற்பட்ட ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு அமெரிக்க இராணுவ வீரர்
கொல்லப்பட்டமைக்கு பழி வாங்கும் நோக்கில் 24 ஈராக்கிய பொது மக்கள் அமெரிக்க
படையினரால் கொல்லப்பட்டமை சம்பந்தமான வழக்கு விசாரணை
கலிபோர்னியா மாநிலத்தின் இராணுவ
ஜூரி
நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இப்பழிவாங்கும் படலத்தில் சம்பவ இடத்தின்
அருகில் இருந்த வீடுகளில் வசித்த சிறுவர்கள் பெண்கள் உட்பட 19 ஈராக்கியர்
அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்பட்டதோடு
குண்டுத்தாக்குதல் நடை பெற்ற இடத்தின் அருகில் இருந்த பொது மக்கள் ஐந்து ஈராக்கியர் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கில் சாட்சியாக அழைக்கப்பட்ட சனிக் டேலா க்ரூஸ் என்ற இராணுவ வீரரே மேற்கண்டவாறு சாட்சியமளித்துள்ளார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தாவது:
ஐந்து ஈராக்கியர் கார் ஒன்றின் அருகில்
பாதையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் எந்த விதமான
ஆயுதங்களும் இருக்கவில்லை. அவர்கள் வாகனத்தை நோக்கி நகரவுமில்லை. அவர்களை
நோக்கி எனது உயரதிகாரி வுட்றிச் தனது துப்பாக்கியால் வேட்டுக்களை
தீர்த்தார். இந்த சம்பவத்தின் போது அவர் சுட்ட முறையை நீதிமன்றில்
க்ரூஸ் செயல் முறை மூலமும் காண்பித்தார்.
இதன் பின் நான் காரின் அருகில்
சென்று நோக்கிய போது நான்கு அல்லது ஐந்து ஈராக்கியர்
தரையில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவ்விடத்துக்கு வந்த வுட்றிச்
அவர்களின் உடலின் மேல் பாகங்களில் மேலும் வேட்டுக்கள் தீர்த்து அவர்களை
கொன்றதை தான் கண்டதாக க்ரூஸ் சாட்சியமளித்துள்ளார்.
இதன் பின்னர் என்னிடம் வந்த வுட்றிச்
யாராவது இது பற்றி கேட்டால் குறித்த ஈராக்கியர் காரில்
இருந்து இறங்கி ஓடிக்கொண்டிருந்த வேளை ஈராக்கிய இராணுவம் அவர்களை
கொன்றதாக கூறுமாறு என்னிடம் கூறினார்.
இச்சாட்சியத்தின் போது க்ரூஸ்
இறந்த ஈராக்கியர் ஒருவரான் சிதைந்த தலைப்பாகத்தின் மீது
தான் சிறுநீர் கழித்ததாகவும் அதற்காக தான் மிகவும்
வருந்துவதாகவும் தெரிவித்தார்.
ஹதித் நகர பழி வாங்கல்களில் பொது மக்கள்
மிகவும் அண்மையில் வைத்து குறிபார்த்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகமான சூட்டுக்காயங்கள் தலையிலேயே காணப்பட்டன. குழந்தைகள் தமது தாயை அணைத்த நிலைகளில் இறந்து
கிடந்தனர்.
இப்படுகொலைகளுடன் தொடர்புடைய ஏழு இராணுவ
வீரர்கள் அமெரிக்க நீதித்துறையினால் குற்றமற்றவர்களாக
அறிவிக்கப்பட்டமை ஈராக்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குற்றம் சாட்டப்பட்ட வுட்றிச் சார்பில் வாதாடிய சட்டத்தரணி க்ரூஸ் இன் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு இடமானது என்று வாதிட்டார்.