ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழா பெரும் சர்ச்சைகளுடன் கூடியதாக மாறி விட்டது - சல்மான் ருஷ்டியின் புண்ணியத்தால். முதலில் அவர் விழாவுக்கு வருவதாக இருந்தது. ஆனால் ராஜஸ்தான் போலீஸார் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கூறவே தனது பயணத்தை ரத்து செய்தார் ருஷ்டி.
ஆனால் பொய் சொல்லி தன்னை வர விடாமல் போலீஸார் தடுத்து விட்டதாக பின்னர் குற்றம் சாட்டினார் ருஷ்டி. இதை ராஜஸ்தான் அரசு மறுத்தது.
இந்த நிலையில்இ ருஷ்டியின் சாத்தானிக் வேர்சஸ் நூலிலிருந்து சில பகுதிகளை விழாவில் வாசித்ததால் நான்கு எழுத்தாளர்களை வெளியேற உத்தரவிடப்பட்டது. இதுவும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில்இ வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஜெய்ப்பூர் விழாவில் ருஷ்டி உரை நிகழ்த்தவிருந்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில அரசும் கூட கடைசி நிமிடம் வரை அனுமதி தரவில்லை. இதையடுத்து விழா அமைப்பாளர்கள்இ மாநில அரசுடனும்இ காவல்துறையுடனும் பேசினர்.
இந்த நிலையில் விழா நடைபெறும் இடத்தில் ருஷ்டியின் பேச்சை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்தன. இதனால் அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பெருமளவில் கூட்டம் இல்லை என்ற போதிலும் வன்முறை மூளக் கூடும் என போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து சல்மானின் வீடியோ உரை ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்தனர். இதனால் ருஷ்டியின் பேச்சு இடம் பெறவில்லை.
முன்னதாக இன்று மாலை 3.45 மணிக்கு வீடியோ உரையை ருஷ்டி நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள ஒரு ஸ்டுடியோவிலிருந்து அவர் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.