கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையில் இன்று பிற்பகல் முறுகல் நிலை ஏற்பட்டது.
சம்பவத்தில் காயமடைந்த 30 பேர்வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் 4 பேர் சிறைச்சாலை அதிகாரிள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பட்ட குழப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், காவற்துறையினர் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.
சிறைச்சாலையினுள்
இடம்பெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நிர்வாக
ரீதியான தீர்மானம் காரணமாக இவ்வாறான முறுகல் நிலை ஏற்பட்டதாக மறுசீரமைப்பு
மற்றும் சிறைச்சாலைகள் மீளமைப்புத்துறை அமைச்சர் சந்திரசிரி கஜதீர
தெரிவித்தார்.
சிறைச்சாலையினுள்
இடம்பெறும், போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளை
தடுக்கும் வகையில் புதிய சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட குழுவினர்
சிலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களின் செயல்பாடு காரணமாக குறித்த முறைகேடுகள் பல தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த
அதிகாரிகள் வருகை தந்த பின்னர் சில சிறைக் கைதிகள் கலகத்தை ஏற்படுத்தும்
வகையில், செயல்பட்டதாகவும், இன்று பிற்பகல் அவர்கள் எதிர்ப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் அதிகாரிகளையும் தாக்குவதற்கு
முயற்சித்துள்ளனர்.
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டதாக அமைச்சர் சந்திரசிரி கஜதீர குறிப்பிட்டார்.
அத்துடன்
சிறைக் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையைச் சேர்ந்த களஞ்சியம் மற்றும்
கைதிகளை பதிவு செய்யும் பிரிவு என்பனவற்றிற்கு தீயிட்டுள்ளனர்.
இது தவிர,
அவர்கள் பேஸ்லைன் வீதிப் பகுதியினை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்டதாகவும்
சிறைச்சாலை அதிகாரிகளை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இது தவிர, தீயை அணைக்க சென்ற தீயணைக்கும் படையினருக்கும் அசௌகரியங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில கைதிகள்
கூரைமீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட போது, அவர்கள்
காவல்துறையினராலும் இராணுவத்தினராலும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு
வரப்பட்டுள்ளனர்.
இதனிடையே
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் நிலைமை
கவலைக்கிடமான இல்லை என அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் பிரசாத்
ஆரியவன்ச தெரிவித்தார்.
இந்த மோதல் சம்பவங்கள் இடம்பெற்றபோது, தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள் 187 பேர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் உடனடியாக அந்த பிரதேசத்தில் இருந்து அகற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பீ. டபிள்யூ. கொடிப்பிலி தெரிவித்தார்.
எவ்வாறாயினும்
வெலிக்கடை சிறைச்சாலையின் நிலைமைகள் இன்று மாலையளவில் கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசேட அறிக்கை ஒன்றையும் சிறைச்சாலைதுறை அமைச்சர் கோரியுள்ளார்.
இதேவேளை,
இன்று இடம்பெற்ற சிறைச்சாலை அனர்த்தத்தில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும்
பங்குபற்றவோ, அல்லது பாதிப்பிற்கோ உள்ளாகவில்லை என ஜனநாயக மக்கள்
காங்கிரசின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
பிரபாகணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
சிறைச்சாலையினுள் கைதிகளுக்கு உணவு மற்றும் உரிய வசதிகள் இல்லையென கைதிகள்
தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இவ்வாறான முறுகல் தோன்றியதாக
சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய சிறைச்சாலை அதிகாரி சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து உணவுகளை கொண்டு செல்லும் நடவடிக்கையை மட்டுப்படுத்தியுள்ளார்.
அதேபோன்று சிறைக்கைதிகளின் வசதிகள் குறித்து சிற்சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளியில்
இருந்து கொண்டு செல்லப்படும் உணவு பொதிகளில் சட்டவிரோதமான முறையில்
போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள்
எழுந்திருந்தன.
இதன்காரணமாகவே புதிய சிறைச்சாலை அதிகாரி இந்த கட்டுப்பாட்டை விதித்திருந்தார்.