மூன்றாவது
டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 99 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பின் இங்கிலாந்தும் தடுமாற ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் சரிந்தன.
இங்கிலாந்து,
பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன.
முதலிரண்டு டெஸ்டில் வென்ற பாகிஸ்தான் அணி தொடரை ஏற்கனவே வென்றது.
மூன்றாவது டெஸ்ட் நேற்று துபாயில் தொடங்கியது. நாணயசுழற்சியில் வெற்றி
பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக் துடுப்பெடுத்தாட முடிவு
செய்தார்.
பாகிஸ்தான்
அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் தவுபீக்
உமர் ஆட்டமிழந்தார். பின் ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் அசார் அலி(1), யூனிஸ்
கான்(4), முகமது ஹபீஸ்(13) வெளியேறினர்.
மீண்டும் பந்துவீச வந்த ஆண்டர்சன், மிஸ்பாவை(1) ஆட்டமிழந்தனர். இதையடுத்து 5 விக்கெட்டுக்கு 21 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது.
பின்
ஆசாத் ஷபிக்(45), சயீத் அஜ்மல்(12), உமர் குல்(13) ஓரளவுக்கு கைகொடுக்க,
முதல் இன்னிங்சில் 99 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்
மூலம் பாகிஸ்தான் அணி, டெஸ்ட் வரலாற்றில் 14வது முறையாக 100
ஓட்டங்களுக்குள் சுருண்டது. இங்கிலாந்து சார்பில் பிராட் 4, ஆண்டர்சன் 3
விக்கெட் வீழ்த்தினர்.
பின்
களமிறங்கிய இங்கிலாந்து அணியும் திணறியது. உமர் குல் வேகத்தில் அலெஸ்டர்
குக்(1), டிராட்(2) ஆட்டமிழந்தனர். அப்துர் ரெஹ்மான் சுழலில்
பீட்டர்சன்(32), மார்கன்(10), பிரையர்(6) வீழ்ந்தனர். சயீத் அஜ்மல் பந்தில்
இயான் பெல்(5) ஆட்டமிழந்தார்.
நேற்றைய
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6
விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் எடுத்து, 5 ஓடட்டங்கள் முன்னிலை
பெற்றிருந்தது.
அணித்தலைவர் ஸ்டிராஸ் 41 ஓட்டங்களுடனும், ஆண்டர்சன் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.



