சிபீ கிண்ண முக்கோண தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 51 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் இலங்கை அணி சார்பில் திரிமான்ன 62 ஓட்டங்களையும், தில்ஷான் 51 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்த்தன 45 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பதான் மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின் 290 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 45.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் விராத் கோலி 66 ஓட்டங்களையும் பதான் 47 ஓட்டங்களையும் ரெய்னா 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திசர பெரேரா 4 விக்கெட்களையும் குலசேகர 3 விக்கெட்களையும் மலிங்க 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக நுவன் குலசேகர தெரிவு செய்யப்பட்டார்.
மொத்தம் நடைபெற்று முடிந்துள்ள 8 போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி முதலிடத்திலும் (14 புள்ளிகள்) இலங்கை இரண்டாம் இடத்திலும் (11 புள்ளிகள்) இந்தியா மூன்றாம் இடத்திலும் (10 புள்ளிகள்) உள்ளன.


