ஆப்கானிஸ்தானில்,
உள்நாட்டுப் போர் நடந்த போது விற்கப்பட்ட, இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான
புத்த மத சிற்பம் ஒன்றை, ஜெர்மனி ஆப்கனுக்கு அளித்துள்ளது.
கடந்த
1990ன் முற்பகுதியில், ஆப்கனை ஆக்கிரமித்திருந்த சோவியத் ரஷ்யா படைகள்
வெளியேறிய பின், உள்நாட்டு வீரர்கள், தலைநகர் காபூலில் உள்ள தேசிய
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த, தொன்மை வாய்ந்த சிற்பங்களைத்
திருடி, கள்ளச் சந்தை மூலம் வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதித்தனர்.
அருங்காட்சியகத்தின் 70 சதவீத சொத்துக்கள், இவ்வாறு திருடு போயின. மொத்தம்,
70 ஆயிரம் சிற்பங்கள் இவ்வாறு விற்கப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்தாண்டுக் கால போரால், அருங்காட்சியகம் பெரிதும்
பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதை புதுப்பிக்கும் பணிகள் நடந்து
வருகின்றன.
இந்நிலையில்,
ஜெர்மனியின் மூனிச் நகரில், காபூலில் இருந்து திருடு போன ஒரு சிற்பம்
இருப்பது தெரியவந்தது. ஆப்கன் அரசு, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள தனது
தூதரகம் மூலம், அதன் உரிமையாளர் யார் எனக் கண்டறிந்து, மீண்டும் அதை நாடு
கொண்டுவர முயற்சி மேற்கொண்டது. அதன் அடிப்படையில், கடந்த வாரம் அந்த
சிற்பம், ஜெர்மனி அரசால், ஆப்கன் அரசுக்கு வழங்கப்பட்டது.
12 அங்குலம்
உயரம் கொண்ட சுண்ணாம்புக் கல் ஒன்றில், கீழ் வரிசையில் நான்கு பேரும்,
மேல் வரிசையில் மூன்று பேரும் நின்று, தங்களது இடப் பக்கம் பார்ப்பது
போல், அந்த சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் உடல்
சிதைந்துள்ளது. அனைவரின் மூக்குகளும் சிதைந்துள்ளன. இது கி.பி., 2ம்
நூற்றாண்டைச் சேர்ந்தது. அக்காலத்தில், ஆப்கனில் புத்த மதம்
நிலவியிருந்தது. இவர்கள், தங்கள் அருகில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்
புத்தரைப் பார்ப்பதாக, இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதாக, ஆப்கன் வெளியுறவு
அமைச்சகம் தெரிவித்துள்ளது.