டுவிட்டரின் செய்தி தணிக்கை முடிவிற்கு சீனா, தாய்லாந்து வரவேற்பு.


 நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்றபடி, செய்திகளைத் தணிக்கை செய்யும் தங்கள் முடிவில், எவ்வித மாற்றமும் இல்லை என, "ட்விட்டர்' சமூக வலைத் தள தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

"பேஸ்புக், ட்விட்டர்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வெளியாகும் செய்திகளில், ஆட்சேபனைக்குரியவற்றை, அந்தந்த வலைத் தளங்களே தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என, சமீபத்தில் மத்திய அரசு கூறியிருந்தது. இதற்குப் பதிலளித்த "கூகுள்' நிறுவனம், அது சாத்தியமில்லாத ஒன்று எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. ஆனால், "ட்விட்டர்' நிறுவனமோ, நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ற தணிக்கை முறையை அமல்படுத்தத் தயார் என அறிவித்தது. இதற்கு, உலகம் முழுவதிலும் இருந்து, பலத்த எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. "ட்விட்டரின்' இந்த முடிவை, இதுவரை எந்த நாடும் வரவேற்காத நிலையில், சீனாவும் தாய்லாந்தும் மட்டும் வரவேற்றுள்ளன.


சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான, "குளோபல் டைம்ஸ்' தனது தலையங்கத்தில், "இணையம் உள்ளிட்ட எந்த துறையிலும், கட்டற்ற சுதந்திரம் என்பது இருக்கவே முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளது. சீனாவில் காலெடுத்து வைக்கும் நோக்கத்தில் தான், "ட்விட்டர்' இந்த முடிவெடுத்துள்ளதாக, குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்நிலையில், "ட்விட்டர்' தலைமை நிர்வாகி டிக் கோஸ்டொலோ இது குறித்துக் கூறுகையில், "தணிக்கை செய்யும் எங்கள் முடிவில், எந்த மாற்றமும் இல்லை. உள்ளூர் அரசின் விருப்பப்படி, குறிப்பிட்ட செய்திகள் அங்கு மட்டும் தடை செய்யப்படும். ஆனால், உலகின் பிற இடங்களில் தெரியும்' என்றார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now