பின்லேடனை கண்டுபிடிக்க தகவல் சொன்ன டாக்டர் மீது தேச துரோக வழக்கு?


        

அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க, 2 நர்ஸ்கள் ரத்தம் சேகரித்துள்ளனர். இதில் அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தான் டாக்டர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ளது அபோதாபாத். இங்கு ராணுவ அகடமி உள்ளது. இதன் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த அல்கய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அந்த கட்டிடத்தில் ஒசாமா தங்கியிருந்தது பாகிஸ்தான் ராணுவம், உளவு நிறுவனம் ஐஎஸ்ஐக்கே தெரியாது என்று கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவுக்கு எப்படி தகவல் கிடைத்தது என்பது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் டாக்டரின் உதவியால் ஒசாமா இருப்பிடத்தை அமெரிக்கா கண்டுபிடித்தது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏவின் ஆட்கள் ஒசாமாவின் இருப்பிடத்தை தேடி வந்துள்ளனர். அப்போது டாக்டர் ஷகீல் அப்ரிடி என்பவர் அவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். அபோதாபாத்தில் ஒசாமா பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தபோது, அந்த பகுதியில் தடுப்பூசி போடுவது போலவும், ரத்த மாதிரிகள் சேகரிப்பது போலவும் ஷகீல் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். அதன்படி 2 நர்ஸ்களை ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தினார். அவர்கள் தெரு தெருவாக சென்று, எல்லோருடைய ரத்தத்தையும் சேகரித்துள்ளனர். அப்போது பின்லேடன் தங்கியிருந்த வீட்டிலும் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி கார்டியன் பத்திரிகை கடந்த ஆண்டு ஜூலையில் முதன்முதலில் வெளியிட்டது. அதை அப்போது சிஐஏ செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், பத்திரிகையில் வந்த செய்தி உண்மைதான் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.

பின்லேடனின் சகோதரி 2010ம் ஆண்டு பாஸ்டன் நகரில் காலமானார். அப்போது அவருடைய டிஎன்ஏவை அமெரிக்க அதிகாரிகள் சேகரித்து வைத்தனர். அபோதாபாத்தில் உள்ளவர்களின் ரத்தத்தை அந்த டிஎன்ஏவுடன் ஒவ்வொன்றாக ஒப்பிட்டு பார்த்த பிறகே, பின்லேடன் பதுங்கியிருக்கும் வீட்டை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ÔÔ2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நர்ஸ்கள் போல 2 பெண்கள் வந்தனர். அவர்களுடன் ஒரு ஆண் வந்தார். அவர் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டார். நர்ஸ்கள் மட்டும் வீட்டுக்குள் வந்து ஹெபடிடிஸ் பி நோய் வராமல் இருக்க இலவச தடுப்பூசி போட்டனர். பாகிஸ்தான் சுகாதார துறையில் இருந்து வருவதாக சொன்னார்கள். வீட்டில் உள்ளவர்களின் விவரங்களை தெரிவித்தால்தான் தடுப்பூசி போட முடியும் என்றனர். எங்கள் ரத்தத்தை சேகரித்து சென்றனர்ÕÕ என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்லேடன் பதுங்கியுள்ள தகவலை பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்காமல், அமெரிக்காவுக்கு தெரிவித்த குற்றத்துக்காக, அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய கமிஷன் பரிந்துரைத்தது. அதற்கு அமெரிக்க ராணுவ அமைச்சர் லியோன் பனெட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் எங்களுக்கு சில தகவல்கள்தான் கொடுத்தார். அதற்கும் தேச துரோகத்துக்கும் சம்பந்தம் இல்லை. தனி மனிதரை பிடித்து சிறையில் அடைப்பது சரியல்ல. தீவிரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் செயல்படுவது உண்மையானால், டாக்டரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now