நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று
சனிக்கிழமை காலை சில மணி நேரத்துக்குள் இடம்பெற்ற ஐந்து வாகன விபத்துகளில்
ஏழு பேர் உயிரிழந்ததுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருகோணமலை, நீர்கொழும்பு, சிலாபம் அளவை மற்றும் கண்டியில் நேற்று அதிகாலை முதல் முற்பகல் வரை இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
கந்தளாயில்
மத்துகமவிலிருந்து மூதூர் கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனமொன்று ஹபரணை கந்தளாய் பிரதான வீதியில் கித்துல் உத்துவ பகுதியில் ரிப்பர் ஒன்றுடன் நேற்று அதிகாலை மோதுண்டதில் இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கித்துல் உத்துவ பகுதியில் பாலமொன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரிப்பருடன் வான் மோதுண்டுள்ளது. இதனால் வானில் பயணம் செய்தவர்களில் இருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கந்தளாய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்த விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பில்
நீர்கொழும்பு மினுவாங்கொடை வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கணவனும் மனைவியும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்கள் லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதுண்டதில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் பலியான கணவனதும் (46 வயது) மனைவியினதும் (42 வயது) சடலங்கள் நீர்கொழும்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆராய்ச்சிக்கட்டில்
சிலாபம் புத்தளம் பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டு பகுதியில் ஒரே திசையில் சென்ற இரு லொறிகள் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து நேற்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இரு லொறிகளே இவ்வாறு மோதுண்டுள்ளன.
விபத்தில் ஒரு லொறியின் சாரதி பலியாகியதோடு, காயமடைந்த இருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அளவையில்
இதேவேளை அளவை நகரில் பொலிஸ் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
கண்டியில்
கொழும்பு கண்டி வீதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதுண்டு நிலத்தில் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
அளுத்வல பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனையில்
இதேவேளை மஹியங்கனை கண்டி வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஹசவக மற்றும் மஹியங்கனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.