எதிர்காலத்தில் விழி வெண்படலங்களை தானம்
செய்ய விரும்புவோர் இணையத்தளத்தின் ஊடாக தம்மை பதிவு செய்துகொள்வதற்கு
சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய கண் வங்கி ஸ்தாபிக்கப்பட்ட
ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டுஅதன் உத்தியோகபூர்வ இணையத்தளம்
அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்த
இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் விழிவெண்படலங்களை தானமாக
வழங்கவிரும்புவோர் தம்மை பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் தற்போது வெற்றிகரமாக இயங்கிவரும் கண் வங்கிகளுக்குள் இலங்கையின்
தேசிய கண் வங்கியும் இணைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருட காலத்தில் தேசிய கண் வங்கியில் துரித முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித்த மஹிபால
கூறியுள்ளார்.
இதேவேளை கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடகாலத்தில் 450
விழிவெண்படலங்கள் கண் பார்வை குறைந்தவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது கண்பார்வை இழந்த சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர்
வாழ்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 20
வீதமானவர்களின் விழிவெண்படலம் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.