இன்று 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கும் மலையகத்தில் அடையாள வேலை
நிறுத்தத்திற்கும் தமிழ் பேசும் மக்கள் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்.
எரிபொருள் விலையேற்றம் இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இன, மத
பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களுக்கும் பாரிய துன்பங்களை கொண்டு
வந்திருக்கிறது என்பதை இந்த அரசாங்கத்திற்கு நாம் புரிய வைக்க வேண்டும் என
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம், மலையக
மக்களுக்கு நாளைய போராட்டம் தொடர்பில் விடுத்துள்ள அழைப்பில் மனோ கணேசன்
மேலும் கூறியதாவது ,மலையகத்தின் பெருந்தலைமைகள் என தம்மை
அழைத்துகொள்பவர்கள் மலையகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று
காட்டுவதற்கு முயல்கிறார்கள். இதனால் நாட்டின் ஏனைய மக்கள் பிரிவினருக்கு
வழங்கும் அங்கீகாரத்தை மலையக மக்களுக்கு இந்த அரசாங்கம் வழங்குவதில்லை.
ஆகவே தோட்ட தொழிலாளர்கள் தமது துன்பம்
முழு நாட்டிற்கும் விளங்கும் வகையில் முழுமையான வேலைநிறுத்தத்தில்
ஈடுபடவேண்டும். அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பதை மலையக
தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இன்று மலையக தொழிலாளர்கள்
உரக்க அழ வேண்டும். அந்த அழுகைதான் முழுமையான வேலை நிறுத்தம்.
அதேபோல் கொழும்பில் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் பிற்பகல் 3
மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு கம்பஹா, களுத்துறை மாவட்ட
மக்கள் கலந்து கொண்டு எமது துன்பங்களை உலகறிய செய்யவேண்டும்.”