ஜெனீவா பிரேரணைக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இலங்கையின் இறைமையை பாதிக்கின்ற விடயம் என்ற வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  கடுமையான கண்டனத்தையும்  தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன், எதிர்வரும் மார்ச் 16ம் திகதி வெள்ளிக்கிழமை குத்பாக்களை (பிரசங்கங்களை) இது தொடர்பாக அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசல்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்வதோடு, நாட்டின் இறைமைக்காகவும், பாதுகாப்புக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் அன்றைய தினம் பிரார்த்திக்குமாறும் இலங்கை மக்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவி பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"சர்வதேச சமூகத்தின் கவனம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டு கூட்டத் தொடர்கள் மீது திரும்பியுள்ளது. சர்வதேச ரீதியாக இடம்பெற்றுள்ள பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட அல்லது அது பற்றிய எவ்வித அக்கறையும் காட்டாத பல நாடுகள் இன்று இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு சுய இலாபமடைய முற்படுகின்றன.

மேலும் நீண்ட கால உள்நாட்டு இனக் கலவரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய சாமாதான சூழலை அனுபவிக்க ஆரம்பித்துள்ள இந்நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படுவது இந்நாட்டு மக்களையும், போரை முடிவுக்குக் கொண்டு வர உதவி செய்த நாடுகளையும் அவமதிப்பதாகவே நாம் கருதுகிறோம்.

மேலும் இக்குற்றச்சாட்டுக்கள் போரினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் தண்டிப்பதாய் அமையுமே அன்றி, ஒருபோதும் தீர்வாக அமைய மாட்டாது என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மையாகும்.

யுத்தத்தின் பின்னர் நல்லிணக்க நடவடிக்கைகளுக்காகவும், தேசிய மேம்பாடுகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளே நாட்டின் தன்னாதிக்கத்தை காத்துக்கொள்ள உதவும் என்ற வகையில் அதற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருப்பது நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இலங்கையரதும் கடமையாகும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை செயற்படுத்தப்பட முன்னதாகவே விசாரணைகளையும் தீர்மானங்களையும் எடுப்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இவ்வளவு அவசரம் காட்டுவது எமக்கு கவலையளிக்கின்றது.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர்கள் இலங்கை மக்களையும், நிரந்தர சமாதானத்திற்காக உதவி புரிந்த நாடுகளையும் எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்துகின்றோம்".
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now