இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணம் கவனத்தில் கொள்ளப்பட
வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய
ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக்
மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான
உதவி செயலாளர் மரியா ஒட்டேரா ஆகியோரிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் நீதி அமைச்சருமான ஹக்கீம் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியின் தலைவர் என்ற வகையில் இலங்கை
முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு அமைச்சர்
ஹக்கீமுக்கு சகல உரிமைகளும் உண்டு என ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
இதனையடுத்து அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டடுள்ளதாவது:
யுத்தத்திற்கு பின்னரான நாட்டின் தற்போதைய நிலைமை, நாடாளுமன்றத்திற்கு
சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் தொடர்பிலும்
அமைச்சர் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.
அதன் பின்னர், சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தல் மற்றும்
களவாக கொண்டு செல்வது பற்றி நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா
தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் ரொபேர்ட் ஓ பிளேக் மற்றும் மரியா
ஒடேரோ ஆகியோரும் பங்குபற்றினர்.
அதில் சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப்புலனாய்வு திணைக்களம், மகளிர்
மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொலிஸ்
சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பிரிவு மற்றும் வெளிநாட்டு அமைச்சு
ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.