இலங்கைக்கு நாடு கடத்தப்படுவோர் தவறாக நடத்தப்படவில்லை - பிரிட்டன்

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள் அங்கு சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவுக்கான ஆபத்துக்களை எதிர்நோக்குவதாக இரு மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளதை பிரிட்டன் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

மற்றுமொரு தொகுதி இலங்கையர்கள் நாடு திருப்பி அனுப்பப்படவுள்ள நிலையில் மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சித்திரவதையில் இருந்து விடுதலை ஆகிய அமைப்புக்கள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் அங்கு கொடூரமாக நடத்தப்படுவார்கள் என்று கூறி, அவர்களை அங்கு அனுப்புவதகான விமானம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுள்ளன.

ஒவ்வொரு நபரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் போது அங்கு அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை என்று பிரிட்டிஷ் அரசாங்கமும், நீதிமன்றமும் திருப்தி அடையும் பட்சத்திலேயே பிரிட்டன், தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

அரசியல் தஞ்சம் கோரும் எல்லா தமிழர்களுக்குமே பாதுகாப்பு தேவை என்று கூறமுடியாது என்று மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருப்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்பப்படுபவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள் என்று திடமான குற்றச்சாட்டு எதுவும் கிடையாது என்றும் அது கூறியுள்ளது.

இதன் மூலம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் பிரிட்டனை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை ஆகிய அமைப்புக்களின் கடுமையான வார்த்தைகளைக் கொண்ட அறிக்கைகளுடன் அது முரண்படுகின்றது.

கடந்த வாரத்தில் இலங்கை இராணுவமும், பொலிஸாரும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய சில தமிழர்களை கைது செய்து, அவர்களை அடித்து, மண்ணெண்ணையில் மூழ்கடித்து அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருந்ததாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்குமாறு நிர்ப்பந்தித்ததாக மனித உரிமை கண்காணிப்பகம் கூறியிருந்தது.

இலங்கை திரும்பும் பெரும்பாலான தமிழர்களை இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் சந்தித்து சில உதவிகளை வழங்கினாலும், அந்த உதவிகளை அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதமாகக் கொள்ள முடியாது என்றும் அது கூறியுள்ளது.

பாலியல் வல்லுறவு உட்பட இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை பொலிஸார் மறுத்திருக்கிறார்கள்.

ஆனால், நாடு திருப்பி அனுப்பப்பட்ட சிலர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now