பதிவுசெய்யப்படாத முன்பள்ளி நிறுவனங்களை நடத்துவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு சட்டத்தில் இடமில்லாததால் தம்மால் இது தொடர்பாக எதுவும் செய்யமுடியாதிருப்பதாக சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜயந்த பீரிஸ் கூறினார்.
தொடக்கநிலை பிள்ளைப்பருவ அபிவிருத்தி சட்டமூலம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்படவிருந்தது. ஆனால், அது இன்னும் நடைபெறவில்லை என அவர் கூறினார்.
'எம்மால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலையில், முன்பள்ளிகளின் ஆசிரியர் தராதரங்கள், கற்பிக்கும் சுற்றாடல் நிலைமைகள், நிறுவனத்தின் ஏனைய தராதரங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென பெற்றோர்களிடம் நாம் கோருகிறோம். பல பெற்றோர்கள் தரம் பற்றி கவலைப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது பிள்ளைகள்தான்' என அவர் கூறினார்.
தான் அறிந்தவரையில் இலங்iகியல் 16,000 தொடக்கநிலை பிள்ளைப்பருவ நிலையங்கள் உள்ளதாகவும் அவற்றில் அரைவாசிக்கும் குறைந்தவையே சம்பந்தப்பட்ட மாகாண சபைகளில் பதிவுசெய்யப்பட்டள்ளன எனவும் ஜயந்த பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை முன்பள்ளி நிலையங்கள் பலவற்றில் பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிவருவதால் பெற்றோர் அது குறித்தும் விழிப்பாக இருக்க வேண்டும் என பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவர் தெரிவித்தார்.