
பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டி துபாயில் நடந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி தொடக்க வீரர்களாக முகமது ஹபீஸ் மற்றும் அஸார் அலி ஆகியோர்
களமிறங்கினர்.
ஹபீஸ் 1 ரன் எடுத்த நிலையில் டெர்ன்பாச் பந்தில் விக்கெட் கீப்பரிடம்
கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அலியுடன் சபீக் ஜோடி
சேர்ந்தார். இவ்விருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை நேர்த்தியாக கையாண்டு அரை
சதத்தை கடந்தனர்.
சிறப்பாக விளையாடிய சபீக் 65 ரன்கள் எடுத்த நிலையில் பிரெஸ்னன்
பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து உமர் அக்மல் 12
ரன்களுக்கும், அஸார் அலி 58 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மிஸ்பா உல் ஹக் - சோயிப் மாலிக் ஜோடி நிதானமாக
விளையாடியது. சோயிப் மாலிக் 23 ரன்கள் எடுத்த நிலையில் ப்ரிக்ஸ் பந்தில்
எல்பிடபிள்யூ ஆனார். தொடர்ந்து அப்ரிடி 9 ரன்களுக்கும், அக்மல் 2
ரன்களுக்கும், ரஹ்மான் 12 ரன்களுக்கும் மிஸ்பா 46 ரன்களுக்கும், அஜ்மல் 1
ரன்னுக்கும் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 237 ரன்கள்
எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் ஃபின்,
பிரிக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், டெர்ன்பாச் 4 விக்கெட்டுகளும், பிரெஸ்னன் 1
விக்கெட்டும் வீழ்த்தினர்.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து
அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் குக் ஜுனைத் கான் வீசிய
இன்னிங்ஸின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, இரண்டாவது பந்தில்
எல்பிடபிள்யூ ஆனார்.
அவரைத் தொடர்ந்து பீட்டர்சனுடன் ட்ராட் ஜோடி சேர்ந்தார். ட்ராட் 15
ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் மோர்கன் 15 ரன்களுக்கும்
பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.
அதன்பின் பீட்டர்சனும்-கீஸ்வெட்டரும் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான்
பந்துவீச்சை நிதானமுடனும், அதே நேரத்தில் ரன் குவிப்பிலும் ஈடுபட்டு
சிறப்பாக ஆடினர்.
கீஸ்வெட்டர் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்
ஆனார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் 100 ரன்களை கடந்தார்.
130 ரன்கள் எடுத்த நிலையில் சயீத் அஜ்மல் பந்தில் அப்துர் ரஹ்மானிடம்
கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கடைசி ஓவருக்கு 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி பிரெஸ்னன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இதனால் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி,
தனது வெற்றி வரிசையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இங்கிலாந்து அணியில்
பிரெஸ்னன் 4 ரன்களுடனும், படேல் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்று கோப்பையை
வென்றது இங்கிலாந்து அணி. ஆட்ட நாயகனாக கெவின் பீட்டர்சன்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தொடரின் சிறந்த ஆட்டக்காரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

