ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் சபையின் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை
எடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்து அரசுக்கு எந்தப் பயமும் இல்லை
என்று தெரிவித்திருக்கிறார் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.
இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம்
விளைவிக்கவென்றே சில சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் செயற்படுகின்றன
என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த மாத இறுதியில் ஆரம்பிக்க உள்ள
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதன் உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைக்
கண்காணிப்பகம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது.
அமைச்சர் சமரசிங்க அதனை வன்மையாகக்
கண்டித்தார். "இது எதிர்பார்க்கப்பட்டதுதான். எங்களைப் பற்றிய மோசமான
கருத்துக்களை ஏற்படுத்துவதற்கு இந்த அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. ஒவ்வொரு
கூட்டத் தொடரிலும் அவர்களின் திட்டமிட்ட செயல்கள் இவை. ஆனால் எங்களுக்குப்
பயமில்லை. எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். ஏனெனில்
நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை'' என்றார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.
ஆனால், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை
பற்றிய தீர்மானம் ஒன்று ஜெனிவா கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றே
எதிர்பார்க்கப்படுகிறது. போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச பொறிமுறை
ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானமாக அது
இருக்காது என்று இராஜதந்திர வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.
அனேகமாக, நல்லிணக்கத்துக்கான
படிப்பினைகள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்தும்படி கோரும் ஒரு தீர்மானமாகவே அது அமையும் என்றும்
இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின்
அறிக்கையை ஜெனிவா கூட்டத் தொடரில் சமர்ப்பிப்பதா இல்லையா என்பது பற்றி
இன்னும் அரசு இறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
|
ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் குறித்து; இலங்கைக்கு எவ்வித பயமில்லை
Labels:
இலங்கை


