ஈராக்கில்,
2004 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு வன்முறைச்
சம்பவங்களில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு
தெரிவித்துள்ளது.
ஈராக்கின் அப்போதைய அதிபர் சதாம் உசேன் மீதான
குற்றச்சாட்டின் அடிப்படையில், 2003ல் அங்கு புகுந்த அமெரிக்கப் படைகள்,
கடந்தாண்டு டிசம்பர் 18ம் தேதி போரை முடித்து விட்டு, கடைசியாக வெளியேறின.
இக்காலகட்டத்தில், போர், பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் வன்முறைச்
சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கையை, ஈராக்கின் சுகாதாரத் துறை அமைச்சகம்
மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இரண்டும் இணைந்து நேற்று வெளியிட்டன.
அதன்படி, 2004 ஏப்ரல் 5 முதல், 2011 டிசம்பர் 31ம் தேதி வரையிலான
காலகட்டத்தில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சத்து 39
ஆயிரத்து 133 பேர் காயமடைந்துள்ளனர். போர் உச்சத்தில் இருந்த போது, 21
ஆயிரத்து 539 பேர் பலியாகியுள்ளனர். 39 ஆயிரத்து 329 பேர்
காயமடைந்துள்ளனர். 2011ல், 2,777 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2009 அக்டோபரில், ஈராக் மனித
உரிமைகள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2004 - 2008 காலகட்டத்தில்,
85 ஆயிரத்து 694 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய
அறிக்கை அதைவிடக் குறைவானவர்களையே பட்டியலில் காண்பித்துள்ளது. அதே போல்,
அமெரிக்க அறிக்கையின்படி, 76 ஆயிரம் பேரும், பிரிட்டனைச் சேர்ந்த தனியார்
இணையதள அறிக்கையின்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேரும், ஈராக் போரில்
இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈராக்கின் கிழக்கில் உள்ள
அமீன் பகுதியருகில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில், மூன்று பேரும்,
பாக்தாத் நகருக்கு வடக்கில் உள்ள டுஸ்குர்மடு என்ற இடத்தில் நடந்த கார்
குண்டுவெடிப்பில், மூன்று பாதுகாப்புப் படை வீரர்களும் பலியாயினர்.