அமெரிக்காவுக்கு
எதிராக உள்நாட்டில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து கடுமையான எதிர்ப்பை
வெளியிடும் அரசு, ஜெனிவாவில் அந்நாட்டின் கோரிக்கைக்குப் பணிந்து
மண்டியிட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரை இதனை
அம்பலப்படுத்திவிட்டது என்று பரபரப்பான குற்றச்சாட்டொன்றை அதிரடியாக
முன்வைத்துள்ளது
ஜே.வி.பி. வடக்கில் ஈ.பி.டி.பி. சட்டவிரோத நடவடிக்கையில்
ஈடுபடுகின்றது என்றும், ஆயுதங்கள் வைத்திருக்கின்றது என்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில்,
அமைச்சர் டக்ளஸை அரசு ஜெனிவாவுக்கு அனுப்பியது உலகில் மிகப்பெரிய நகைச்
சுவை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.ஜெனிவா மாநாடு தொடர்பில் கருத்து
வெளியிடும்போதே ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர்
விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை
நடைமுறைப் படுத்துமாறு அமெரிக்கா அரசுக்கு அழுத்தம்
கொடுத்துவருகின்றது.ஜெனிவாவில் விசேட உரையொன்றை நிகழ்த்திய அமைச்சர் மஹிந்த
சமரசிங்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவோம் என
தெரிவித்திருந்தார். அதற்கு அவர் சர்வதேசத்தின் உதவியையும்
கோரியுள்ளார்.அப்படியானால், அமெரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் ஏன்
ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது? அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பை
வெளியிடும் அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று மண்டியிட்டுள்ளது.உள்நாட்டில்
ஒரு முகத்தையும், வெளிநாட்டில் இன்னொரு முகத்தையும் காட்டும் அரசின்
கபடத்தனம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. உள்நாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட
ஆர்ப்பாட்டங்கள், மனித உரிமைகள் பேரவைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அல்ல,
எரிபொருள்கள், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து
மக்கள் வீதியில் போராடுவதைத் திசைத்திருப்புவதற்கு திட்டமிட்டு
நடத்தப்பட்டவையே.
வடக்கு, கிழக்கில் கருணா, டக்ளஸ் ஆகியோர்
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்றும், ஆயுதக்குழுக்களாகச்
செயற்படுகின்றனர் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை
நடைமுறைப்படுத்துவோம் எனக் கூறும் அரசு, ஜெனிவாவுக்கு அமைச்சர் டக்ளஸை
அழைத்துச் சென்றமை உலகில் மிகப் பெரிய நகைச்சுவையாகும்.உள்நாட்டில் மனித
நலன்களைப் பாதுகாத்து ஜனநாயகத்தை ஏற்படுத்தியிருந்தால் எந்தவொரு
பிரேரணையையும் தோற்கடித்திருக்கலாம் என்றார்.