பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நாட்டின் சட்டவாதிக்கம் ஒருவரையே சார்ந்துள்ளதென பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் உறவினர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டார்.
ஏனைய அனைவரும் சட்டத்தின் முன் சமமாக கருதப்படும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இதுவரை கைதுசெய்யப்படாமை ஆச்சரியத்துக்குரிய விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நீதிமன்றத்திற்கும் மேலாக இருக்கின்ற ஒருவரா? என இதன்போது முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் வினவினார்.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விடுமுறை கோரி அண்மையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
எனினும் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட சிலர் கொலை செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கும் அதிககாலம் கடந்துள்ள போதிலும், சம்பவத்தின் சந்தேகநபரான துமிந்த சில்வா கைதுசெய்யப்படவில்லை என முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை துமிந்த சில்வாவை கைதுசெய்வது தொடர்பாக சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பாக ஆஜரான பொலிஸ் இன்ஸ்பெக்டர் மெரில் ரஞ்சித் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இதன்பிரகாரம் விரைவில் அவரை கைதுசெய்வதற்கான சட்டமா அதிபர் ஆலோசனைகள் கிடைக்கும் என பொலிஸ் இன்ஸ்பெக்டர் கூறினார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 18 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.