ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என இரு அவைகளிலும் உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக சன் செய்திவெளியிட்டுள்ளது.
மக்களவை காலை ஆரம்பமான போது தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்தப் பிரேரணை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஒருநாட்டிற்கு எதிராக பிரத்தியேகமாக கொண்டுவரப்படும் தீர்மானத்தினை சம்பிரதாயப்படி இந்தியா ஆதரிப்பதில்லை என இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார்.
எனினும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து இந்தியா விழிப்புடன் இருப்பதாகவும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆகியோருக்கு இந்த விடயம் குறித்து எழுத்து மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக முடிவெடுக்க இன்னும் அவகாசம் உள்ளதென குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, அது குறித்து அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும் எனக் கூறினார்.
இதேவேளையில் இலங்கை விவகாரம் குறித்த பிரச்சினை மாநிலங்கள் அவையிலும் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது.
தி.மு.க, அ.தி.மு.க, பாரதீய ஜனதா கட்சி, மக்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சிகள் இலங்கை விடயம் தொடர்பாக மாநிலங்கள் அவையில் விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.