இலங்கையில் ஆயுதக் குழுக்கள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இயங்கி வருகின்றன

இலங்கையில் ஆயுதக் குழுக்கள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இயங்கி வருகின்றனகற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரும், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து இயங்கும் “குடிமக்கள் உரிமைகள் இயக்கம்” என்ற அமைப்பு குரல் கொடுத்திருக்கிறது.

நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சமூக பிரச்சினைகளில் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வரும் இந்த அமைப்பு, நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள், தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதுக்குமே பொருந்துவதாகக் கூறுகிறது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குலைந்துவருவதாக கூறும் இந்த அமைப்பு, சட்டவிரோதக் கும்பல்களும் ஆயுதக் குழுக்களும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இயங்கிவருவது இப்போது சாதாரணமாக் காணக்கூடிய விஷயமாகிவிட்டது என்று கூறுகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை, அப்பிராந்தியங்கள் பெரிய அளவில் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளன, ஆயுதக்குழுக்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன, சிவில் நிர்வாகமும் பொலிஸ் துறையும் சுதந்திரமாச் செயல்படவில்லை என்பது நல்லிணக்க ஆணையத்தின் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறும் இந்த அமைப்பு, நாட்டின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுவதாக கூறுகிறது.

கடந்த ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்டதிலிருந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உட்பட ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் சட்டத்தை வெளிப்படையாக மீறிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் இந்த அமைப்பு கூறுகிறது.

நாடு இதே நிலையில் செல்ல அனுமதிப்பது முட்டாள்தனமானது என்று கூறும் இந்த அமைப்பு, இராணுவம் சிவில் துறைகளில் ஈடுபடுவதை விரைவாக நிறுத்த வேண்டும், சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் கலைக்கப்பட்டு அவைகளின் ஆயுதங்கள் களையப்படவேண்டும், பொது நிர்வாகத்தையும் பொலிஸ் துறையையும் கண்காணிக்க சுதந்திரமான ஆணையங்கள் நிறுவப்படவேண்டும் , மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப்பகிர்வு செய்யப்படவேண்டும், தகவலறியும் உரிமை தரப்படவேண்டும் என்று கூறுகிறது.

இந்த அமைப்பின் அறிக்கையில், காமினி வியன்கொட, ஜயதிலக கம்மல்லவீர, சந்திரகுப்த தேனுவர, கே.டபிள்யூ, ஜனரஞ்சன, சுதர்ஷன குணவர்தன மற்றும் குசால் பெரெரா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு கெடுவது மற்றும் அதிகரித்து வரும் ஆட்கடத்தல்கள் ஆகியவை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜனநாயகத்துக்கான வழக்குரைஞர்கள் என்ற அமைப்பு, மார்ச் 11ம் திகதி, கொலன்னாவ பகுதியில் வெள்ளை வேனில் வந்தவர்கள் ஆட்கட்த்தல் சம்பவம் ஒன்றில் ஈடுபட முயன்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட்தாக்க் கருதப்படும் சந்தேக நபர்களைப் பொதுமக்களே போலிசாரிடம் பிடித்துக்கொடுத்தும், ஒரு உயர் பொலிஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில், பொலிஸார் இந்த சந்தேக நபர்களை விடுவித்துவிட்டதாகத் தமக்கு தகவல் வந்துள்ளதாகக் கூறுகிறது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மட்டும், ஆட்கட்த்தல் சம்பவங்கள் மற்றும் காணாமல் போகும் சம்பவங்கள் 11 நடந்துள்ளதாக் குறிப்பிடும் இந்த அமைப்பு இதில் குறைந்தது ஏழு சம்பவங்கள் வெள்ளை வேன் சம்பவங்கள் என்றும் கூறுகிறது.

தொடரும் இந்த ஆட்கடத்தல் சம்பவங்கள், நாட்டில் நிலவும், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படாத கலாச்சாரத்தைச் சுட்டிக்காட்டுவதாகக் கூறும் இந்த அமைப்பு, இதைச் செய்பவர்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பதையே காட்டுவதாகக் குற்றஞ்சாட்டுகிறது.

இதனிடைய, இலங்கை தொடர்பாக ஐ.நா மன்ற மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை முன்மொழிந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், சுமார் 600 புத்த பிக்குகள் நேற்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now