
பாகிஸ்தான் வீரர்கள் கராச்சி விமானநிலையத்தினூடாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது - ஷகிப் அப்ரிடி தனது காரை நோக்கிச் சென்றார். அப்போது அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகவும், புகைப்படங்களை எடுப்பதற்காகவும் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்தனர். அப்போது கோபமடைந்த ஷகிட் அப்ரிடி, அங்கிருந்த ரசிகர்கள் சிலர் மீது தனது கையால் குத்தினார். ஷகிட் அப்ரிடியின் சகோதரர் குறுக்கிட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுத்தார்.
இச்சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஷகிட் அப்ரிடி, யாரையும் காயப்படுத்தும் நோக்கில் அதைச் செய்யவில்லை எனவும், தனது மூன்று வயதான மகள் கூட்டத்தின் நடுவே சிக்கியதை அடுத்தே தான் கோபமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வீரர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவையும் அங்கு காணப்படவில்லை எனத் தெரிவித்த ஷகிட் அப்ரிடி, வீரர்களிடம் கையெழுத்துப் பெறவும், புகைப்படங்களை எடுக்கவும் ரசிகர்கள் முயல்வது வழமை எனவும் தெரிவித்ததோடு, ஆனால் இம்முறை அவர்கள் கட்டுப்பாட்டை மீறியதாகவும், தனது மகள் காயப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே குத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.