
செவிப்புலனற்ற
பெண் குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிக்க நிதி சேகரிப்பதாகக் கூறி சிலாபம்
நகரில் நிதி சேகரித்துக் கொண்டிருந்த மோசடிக் கும்பலொன்றை சிலாபம் பொலிஸார்
கைது செய்துள்ளனர்.
மூன்று பெண்களும் 5 ஆண்களுமாக வாடகைக்கு அமர்த்திய வேன் ஒன்றில் கிராமம்
கிராமமாகவும் நகரங்களுக்கும் சென்று நிதி சேகரித்துள்ளனர். சிலாபம் நகரில்
நேற்று முன்தினம் நிதி சேகரித்துக் கொண்டிருந்த போது இவர்கள் கைது
செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து பெருந்தொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக
நபர்கள் கம்பஹா, தெல்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சிலாபம் பொலிஸார்
தெரிவித்தனர்.
சிலாபம் மாதம்பை இஹலகம பகுதியிலுள்ள பெண் குழந்தையொன்றுக்கு செவிப்புலன்
தொடர்பாக தீவிர சிகிச்சையளிக்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை
செய்துள்ளனர். இச்சிகிச்சைக்காக செவிப்புலன் கருவி பயன்படுத்த வேண்டும்
எனவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதற்காக பெருந்தொகை பணம் தேவைப்படுவதாகக்
குழந்தையின் பெற்றோர் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த விளம்பரத்தைக் கண்ட மேற்படி நபர்கள் தம்மால் தேவையான உதவியைச்
செய்ய முடியும் எனக் கூறி டாக்டர்கள் வழங்கிய பரிந்துரை ஆவணங்களைப்
பெற்றுக்கொண்டு நிதி சேகரிப்பதற்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சிட்டு
நிதி சேகரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சேகரித்த நிதியிலிருந்து சிறிதளவு பணத்தை குழந்தையின் தாய்க்கும் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.