மீண்டும் தலைதூக்கும் வெள்ளை வேன் கடத்தல்கள்

மீண்டும் தலைதூக்கும் வெள்ளை வேன் கடத்தல்கள்இலங்கையில் மீண்டும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான அச்சுறுத்தல்களும் கவலைகளும் அதிகரித்துள்ளன.

கடந்த சில மாதங்களில் காணாமல்போன 32 பேரில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பெண்ணொருவர் உட்பட 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 20 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காணாமல்போனவர்களில் பலர் வௌ்ளை வேன் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் போன்றோரும் குற்றக்கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவோருமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

காணாமல்போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி முன்னாள் போர்வலய மக்களின் சார்பாக போராட்டங்களை நடத்திவந்த லலித்குமார் வீரராஜா மற்றும் அவரது நண்பர் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போய் பல வாரங்கள் கடந்தும் அவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என அவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.

கடந்த மாதம் வௌ்ளை வேன் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட ராமசாமி பிரபாகரன் என்ற தமிழ் வர்த்தகர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவையில் நகரசபைத் தலைவர், தனது சகோதரரைக் கடத்திச் சென்று கொன்ற வெள்ளை வேன் ஆயுததாரிகளே அண்மையில் தன்னையும் கடத்த முயன்றதாக கூறுகிறார்.

குறித்த வெள்ளை வேனில் இராணுவத்தினரே பயணித்ததாக ஒப்புக்கொண்ட பாதுகாப்புப் பிரிவினர் கடத்தல்முயற்சி தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

ஆனால் அரசாங்கத்தின் அனுசரணை இன்றி இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் தலைநகரில் நடக்க வாய்ப்பில்லை என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன பிபிசியிடம் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் நடந்துவருவதாகவும் அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்பி அஜித் ரோஹண பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now