சரியான இணைப்பாட்டம் பகிரப்படாமையால் தாம் எதிர்பார்த்த ஓட்ட இலக்கை எட்டமுடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தமை, அதிகளவான ஓட்ட இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காகவே எனவும், இருப்பினும் துடுப்பாட்ட வீரர்கள் உரிய முறையில் பிரகாசிக்காமையால் அது கைநழுவிப்போனதாகவும் மஹேல ஜெயவர்தன சுட்டிக்காட்டினார்.
250 ஓட்டங்களை பெற்றிருந்தாலும் ஓரளவு பாகிஸ்தானுக்கு சவால் விடுத்திருக்கலாம் என்று இலங்கை அணித் தலைவர் தெரிவித்தார்.
இலங்கை அணி ஓய்வில்லாமல் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுகின்றமையால் வீரர்களுக்கு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கலாம் என்று சிலர் கருத்து வெளியிடுகின்றனர்.
இந்தநிலையில் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குறித்த வாய்ப்பு இலங்கைக்கு கைநழுவிப்போயுள்ளது.
நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆறு விக்கெட்களால் இலங்கை அணி தோல்வியடைந்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மிர்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45. 4 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கையணியின் பெரும்பாலான வீரர்கள் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார 71 ஓட்டங்களையும், உபுல் தரங்க 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்ஸஸ் சீமா நான்கு விக்கட்களையும் சயிட் அஜ்மால் மூன்று விக்கட்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 39 . 5 ஓவர்களில் நான்கு விக்கட்களை இழந்து 189 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கைக் கடந்தது.
அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் மற்றும் உமர் அக்மல் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தினால் பாகிஸ்தானின் வெற்றி இலகுபடுத்தப்பட்டது.
மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களையும் உமர் அக்மல் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.