
இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களானவை பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று நிறைவேற்றியது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன்வைத்தது. கியூபா, வெனிஸுலா முதலான நாடுகள் இதற்கு இணை அனுசரணை வழங்கின. நோர்வே, சுவிட்ஸர்லாந்து, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியனவும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இத்தாலி, ஸ்பெய்ன், செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, மோல்டாவியா, கௌதமாலா, கொஸ்டாரிக்கா, கெமரூன் உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இத்தீர்மானம் வெளிவேஷம் கொண்டது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு விமர்சித்துள்ளார்.
இது இரட்டைவேடத் தனமான, அநீதியான, அழிவேற்படுத்தும் தீர்மானம் எனவும் பிராந்தியத்தில் மேலும் பதற்றநிலையை ஏற்படுத்தும் எனவும் இஸ்ரேலிய தூதுவர் அஷாரொன் லெஷானோ யார் கூறினார்.
இஸ்ரேலானது இருநாடுகள் கொள்கையில் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பலஸ்தீனர்களுடன் நேரடி இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க வேண்டுமென இஸ்ரேல் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இப்பிரேரணையை பலஸ்தீன அதிகார சபை வரவேற்றுள்ளது.