ஜெனீவாவில்
மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான ஒரு பிரேரணையை முன்மொழிவதற்கு
அமெரிக்கா அறிவித்தல் கொடுத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என
நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு இது தொடர்பில் அவர் மேலும்
தெரிவித்திருப்பதாவது,இதனைத் தவிர்த்துக் கொள்வதற்காக நாம் பல முயற்சிகளை
மேற்கொண்டோம்.
ஆயினும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக் கொண்டு அமெரிக்காவும் அதன் சில நேச
நாடுகளும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழிந்திருந்தாலும் கூட, இலங்கை
அரசாங்கம் உள்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில்
காட்டி வரும் ஆர்வம் குறித்து மிகவும் தெளிவாக அறிந்து வைத்திருக்கும் எமது
நேச நாடுகள் இந்தப் பிரேரணையை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என
எதிர்பார்க்கப் படுகின்றது.
அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் பிரேரணையை, ஏற்கனவே இருந்த அதன்
உள்ளடக்கத்தை விடவும் இன்னும் சற்று குறைந்த தாக்கம் உள்ள தாக மாற்றுவதற்கு
சில நாடுகள் முயற் சித்து வருவதாக நாம் கேள்விப்படுகின் றோம்.
அது எவ்வாறாயினும், தனிப்பட்டதொரு நாட்டை இலக்கு வைத்து இவ்வாறானதொரு
பிரேரணையை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் துருவப்படுத்தலை ஏற்படுத்தியுள்ள
இனப்பிரச்சினையை இன்னும் பாரதூரமானதாக ஆக்குவதற்கும், குழப்புவதற்குமான ஒரு
முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எண்ணத் தோன்றுகின்றது.
எனவே, இவ்வாறான முயற்சியின் பக்க விளைவாக ஏற்படப் போகும் ஆபத்துக்
குறித்து ஒரு சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான
கட்சியொன்றின் தலைவர் என்ற முறையில் என்னுடைய பக்க நியாயங்களை ஜெனீவாவில்
வைத்து நான் கூறியுள்ளேன். சில மேற்கு நாடுகளைப் பொருத்தவரை அதனால் எந்தத்
தாக்கமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அது மிகவும் கவலைக்குரியதாகும்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை இலங்கை அரசாங்கத்தோடு நேசபூர்வமாக இந்த
விவகாரத்தை அணுகி அதற்கான போதிய காலவகாசத்தை தருவதற்கு அவை தவறியிருப்பது
இராஜதந்திர ரீதியான பெரியதொரு தவறாக விளங்கப் போகின்றது.