இரட்டைக் கொலை: நடந்தது என்ன?


போதைப் பொருள் கடத்தல் இரகசியம் வெளிவந்ததையடுத்தே கஹவத்தையில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது இரகசியப் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.கொலை செய்யப்பட்ட காவிந்தியா என்ற 18 வயது யுவதியிடம் உணவுப் பொட்டளம் எனக் கூறி தினமும் போதை வஸ்து கடத்தலில் சந்தேக நபர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

இரட்டைப் படுகொலைகளில் பிரதான சந்தேக நபரின் மனைவி இரகசிய பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத் திலேயே உண்மைத் தகவல்கள் வெளி வந்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி கஹவத்தையில் நடைபெற்ற இரட்டைக் கொலையின் பிரதான சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதையடுத்து நகர் நேற்று வழமைக்கு திரும்பியிருந்தது.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நகரெங்கும் நேற்று பாதுகாப்பு கடமையில் ஈடுபத்தப்பட் டிருந்தனர். மேற்படி இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தாயும் மகளும் கொலை செய்யப் பட்டதன் பின்னணி அனைத்தையும் விசாரிக்கவென ஏழு இரகசிய பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொடக்கவெல பிரதேச சபை உறுப்பினர் எல்.எச். தர்மசிறி என்பவரது சகோதரரான ராஜு என்றழைக்கப்படும் எல்.எச். தர்ஷன என்பவரே பிரதான சந்தேக நபராவார். அவரது மனைவி அசோக்கா. முச்சக்கர வண்டியொன்றின் சாரதி ஜே.டபிள்யு சனத் நந்தன ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட காவிந்தியா (18) இரத்தினபுரி பர்கியுசன் மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்தவர். அவர் கொலைச் சந்தேக நபரான ராஜு என்பவரது வீட்டின் பக்கமாகவே பாடசாலைக்கு செல்வார்.

இரத்தினபுரி நகரிலிருக்கும் நண்பரிடம் கொடுக்குமாறு கூறி தினமும் காவித்தியாவிடம் உணவுப் பொட்டளமொன்றை ராஜு கொடுத்து அனுப்புவார். ராஜு அக்கம் பக்கத்திலுள்ளவர் என்பதாலும் உணவு பொட்டளத்தை எடுத்துச் செல்வதில் தனக்கு சிரமம் இல்லாமையினாலும் முகம் சுளிக்காமல் காவிந்தியா உணவுப் பொட்டளத்தை எடுத்துச் செல்வார்.

தினமும் உணவுப் பொட்டளம் கொண்டு செல்லும் விடயத்தை தனது தாயிடமும் கூறவில்லை.

பாடசாலை செல்லும் ஒருநாள் காவிந்தியாவுக்கு உடல்நிலை சரியி ல்லாமல் போனது. அவர் பாடசா லைக்கு செல்லாமல் ராஜு கொடு த்திருந்த உணவுப் பொட்டளத்துட னேயே வீடு திரும்பியிருந்தார். உடல் நிலை சரியில்லையென்பதால் அவர் வீடு வந்ததும் உறங்கிவிட்டார்.

காவிந்தியாவின் தாயார் புத்தகப் பையை பார்த்தபோது உணவுப் பொட்டளத்தை கண்டுள்ளார். இது தொடர்பாக காவிந்தியாவிடம் விசா ரித்த போது ராஜு என்பவர் உண வுப் பொட்டளமொன்றை தினமும் கொடுத்தனுப்பும் விடயத்தை அவர் தாயிடம் கூறினார்.

காவிந்தியாவின் தாய் உணவுப் பொட்டளத்தை பிரித்து பார்த்த போது அதிலிருப்பது போதை பொருளென்பதை உறுதி செய்துள்ளார். தன் குழந்¨யை போதைப் பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தியதை எண்ணி ஆத்திரமடைந்த அவர் ராஜுவின் வீட்டுக்கு சென்று அவரை ஏசியுள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து இரு வீட்டாருக்குமிடையே ஜன்மப் பகை உண்டானது.

ராஜு என்பவர் கப்பம் பெறுதல், கொலை தொடர்பாக பிரதேசத்திலுள்ள பிரபல சண்டியராக இருந்து வந்துள்ளார். அவரது சகோதரர் அரசியலுடன் தொடர்புடைய பிரமுகர்களுடன் தொடர்புகள் இருந்ததால் ராஜுவுக்கு இது சாதகமாகவேயிருந்தது.

இதனால் ராஜுவுக்கு எதிராக எவருமே குரல் கொடுக்கவுமில்லை செயற்பட வுமில்லை.

தனது போதைப் பொருள் கடத்தல் விடயம் வெளிவந்து விடுமோ என்ற அச்சத்தில் பலவறாக சிந்தித்த ராஜு தாயையும் மகளையும் கொலை செய்து விடுவதென்ற தீர்மானத்திற்கு வந்துள்ளார்.

இந்த கொலையை செய்வதற்கு மிகவும் நம்பிக்கையான இருவர் தேவையென்பதை உணர்ந்து அசோக்கா என்ற தனது மனைவியையும் சனத் நந்தன என்ற முச்சக்கர வண்டி சாரதியையும் சேர்த்துக் கொண்டார்.

ஜனவரி 31ம் திகதி இரவு 8 மணியளவில் ராஜு தனது மனைவியுடன் வெட்டுக் கத்தியுடன் காவிந்தியாவின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார்.

வீட்டுக் கதவை திறந்த தாய் நயனாவின் தலையில் ஓங்கி வெட்டுக் கத்தியால் வெட்டியுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் நிலத்தில் விழுந்த தாயைக் கண்டு கதறியபடி ஓடி வந்த காவிந்தியாவின் கழுத்தில் கத்தி பாய்ந்துள்ளது. இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடக்க காவிந்தியாவை மட்டும் தூக்கி கொண்டு அவசர அவசரமாக முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று ஓபாத்த பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதிக்குள் வீசியுள்ளனர்.

கொலை தொடர்பாக எந்தவித தடயமும் கிடைக்கக் கூடாது என்ற விடயத்தில் ராஜு நுணுக்கமாக கையாண்டுள்ளார்.

இதனால் நியமிக்கப்பட்ட ஏழு இரகசிய பொலிஸ் குழுக்களும் 36 நாட்கள் கொலைச் சந்தேக நபர்களை கண்டுபிடிக்க கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

இறுதியில் இரட்டைப் படுகொலைகளின் பின்னணி ராஜுவின் மனைவி அசோக்காவினூடாகவே வெளிவந்தது. அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே உண்மைத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது கொலை தொடர்பான சரியான தகவல் வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமெனவும் பொலிஸ் மா அதிபர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now