இந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்ட குழுவொன்று இலங்கையில்?



இந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றுக்கொண்ட குழுவொன்று இலங்கையில் இயங்கி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் திருகோணமலை பெரியகுளம் பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இந்தக் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தென் இந்தியாவிலிருந்து வந்த ஆயுதக் குழுவொன்றே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி குறித்த ஈ.பி.டி.பி உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். சடலம் மீட்கப்பட்ட இடத்தில் “துரோகிகளுக்கு இடமில்லை, மீண்டும் வந்து விட்டோம்” என எழுதப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
படகு மூலம் தென் இந்தியாவிலிருந்து குறித்த தரப்பினர் இலங்கைக்கு சென்றுள்ளனர். இரகசியமான முறையில் ஈ.பி.டி.பி உறுப்பினரை கொலை செய்த நபர்கள், மீண்டும் இந்தியா செல்ல எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இதனால் இந்த நபர்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரகுநாதன் எனப்படும் முத்து என்பவரே படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இறுதியாக முச்சக்கர வண்டி சாரதியாக கடமையாற்றிய குறித்த நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் எனவும், பின்னர் ஈ.பி.டி.பி.யில் இணைந்து கொண்டதாகவும் தெரியவருகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்திய முகாம் ஒன்றில் இராணுவ பயிற்சி பெற்றுக் கொண்டதாக சந்தேக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பிரான்ஸ் மற்றும் இந்தியாவிலிருந்து பெருந்தொகை பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இயங்கி வரும் குழுவொன்றே இந்த கொலைச் சம்பவத்தை மேற்கொண்ட நபர்களை வழிநடத்தியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now