துப்பாக்கி
குண்டு துளைத்த 37 வயது அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு இதுவரை இல்லாத
அளவில் மிகப் பெரிய முகமாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை
புரி்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மேரிலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையிலேயே இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
ரிச்சர்ட் லீ நோரிஸ் என்ற இந்த வீரர் பயங்கர விபத்துக்குப் பின்னர் 15 ஆண்டு காலமாக சமூகத்திலிருந்து ஒதுங்கியே வாழ்ந்து வந்தார்.
குண்டு பாய்ந்து மிகவும் கொடூரமாக மாறிய தனது முகத்தை மறைப்பதற்காக இவர் எந்நேரமும் முகமூடி அணிந்து வந்தார்.
ஆனால் மேரிலண்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் அறுவை சிகிச்சை
நிபுணர்கள் அவருக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய முகமாற்று அறுவை
சிகிச்சையை மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளனர்.
இவரது முகத்தின் தோற்றம் மட்டுமல்லாது அவருடைய பல்வரிசை, நாக்கு, தாடை எலும்பு எல்லாமே புதிது தான்.
36 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை தான் இதுவரையில் நடந்த
முகமாற்று அறுவை சிகிச்சைகளிலேயே மிகவும் பெரியது என அந்நிபுணர்கள்
தெரிவிக்கின்றனர்.
மேலும் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் இராணுவப் பணி செய்யப் போய்
காயமடைந்தவர்களுக்கு தங்களால் விரைவில் இப்படியான முகமாற்று அறுவை
சிகிச்சைகளைச் செய்ய முடியும் எனவும் இந்நிபுணர்கள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ரிச்சர்ட் லீ நோரிஸ் உடல் நலம்
தேறிவருகிறார் என்றும், அவரால் பல் துலக்கவும், முகச் சவரம் செய்து
கொள்ளவும் முடிகிறது, அவரால் மீண்டும் வாசனைகளை உணர முடிகிறது என்றும்
அவரது மருத்துவர்கள் கூறுகின்றனர்.