இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்! நீதிமன்றில் ஒரு புதுமையான வழக்கு.

இந்தியா இலங்கைக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி மதுரை உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சட்டத்தரணி கால்வின் கிறிஸ்டோபர். இவர், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருந்ததாவது: 

பாக்.ஜலசந்தி, கச்சத்தீவு, வாலிநோக்கம் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இதுவரை பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கிரிக்கெட் மட்டையால் தமிழக மீனவர்களை தாக்கினர். இந்திய கடல் எல்லையிலே இந்த தாக்குதல் நடந்தது. இதில் 4 மீனவர்கள் உயிரிழந்தனர். 

அடுத்து அவுஸ்திரேலியாவில் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போதும் இலங்கை அணியை, இந்தியா தோற்கடித்தது. இதன்காரணமாக 20தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கினர். பெட்ரோல் குண்டுகளை வீசினர். அப்போது 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேதத்தை தமிழக மீனவர்கள் சந்திக்க நேரிட்டது. 

இதுவரை நடந்துள்ள கிரிக்கெட் போட்டிகளின் பாதுகாப்புக்காக மட்டும் இந்திய அரசு 6 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழக அரசு சார்பில் 3 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. 

ஆனால் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் மீனவர்களின் குடும்பத்துக்கு மட்டும் அரசு 3 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது. இது கண்டிக்கத்தக்கது. 

இனப்பிரச்சினை முடிந்த பிறகும்,அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது தடுக்கப்படவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதற்கு கிரிக்கெட் போட்டியின் முடிவும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. 

எனவே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இந்தியா - இலங்கை இடையே கிரிக்கெட் போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்திய அணியுடன், இலங்கை அணியும் மோதும் வகையில் போடப்பட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சித்ராவெங்கட்ராமன்,கருப்பையா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now