வல்லுறவுக்கு
ஆளாகியவர்களுக்கு கருச்சிதைவை சட்டபூர்வமானதாக்கும் வகையில் சட்டத்தை
திருத்துவது பற்றிய நிபுணர்களின் கருத்துக்களை வரவேற்பதாக சிறுவர்
அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சரான திஸ்ஸ கரலியத்த இன்று
கூறினார்.
நீதிமன்ற முறைமை மற்றும் வைத்திய நிபுணர்களை இவ்விடயத்தில் தமது ஆதரவை
வழங்க வேண்டுமென அமைச்சர் கரலியத்த கேட்டுள்ளார். சமயக்குழுக்கள் இதனை
எதிர்க்கக்கூடுமாயினும் வல்லுறவு காரணாக கர்ப்பமுற்றவர்களின் நலனை
கருத்திற்கொண்டு இந்த விடயம் கருத்தாடல் செய்யப்பட வேண்டுமென அவர்
கூறினார்.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் தகவல்படி
இலங்கையில் கருச்சிதைவு செய்யும் பெண்களில் 90 சதவீதமானோர்
திருமணமானவர்களாக உள்ளனர். தமக்கு ஏற்கெனவே குழந்தைகள் போதுமென எண்ணுவோரும்
தம் கடைசிப்பிள்ளை நிறைகுறைவாக உள்ளது எனக் கருதுவோரும் கருச்சிதைவு
செய்துகொள்ள தீர்மானிக்கவுள்ளனர். போதிய வருவாய் இன்மையும் உழைப்புக்காக
வெளிநாடு செல்வதும் 20 சதவீதமான கருச்சிதைவுக்கு காரணமாக உள்ளது. 4-7
சதவீதமான கருசிதைவுக்கு காரணமாக விவாகரத்து உள்ளது.
குறைந்தபட்சம் நாளொன்றுக்கு மூன்று சிறார்கள்
வல்லுறவுக்குள்ளாக்கப்படுகின்றனர். 2011 ஆம் ஆண்டில் 1636 சிறார்கள்
வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் சிறுவர் அபிவிருத்தி பெண்கள்
வலுவூட்டல் அமைச்சு நேற்று தெரிவித்தது. அமைச்சின் அறிக்கையின்படி,
அநுராதபுரம், பொலன்னறுவை, மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் கூடுதலான
வல்லுறவுகள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 87 சதவீதமானோர் வயது
குறைந்த பெண் பிள்ளைகள் ஆவர்.