வைத்தியசாலைகளில்
மரணமடைவோரின் சடலங்களை குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ்
நிலையத்தின் நெறிப்படுத்தலின் கீழ் மரண விசாரணை அதிகாரிகளால் விசாரணை
நடத்தி உறவினர்களிடம் விரைவாக ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
பொலிஸ் மா அதிபர் என்.கே இளங்ககோனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அமைச்சர் ஹக்கீம்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அக்கடிதத்தில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வைத்தியசாலைகளில் நோயினாலோ அல்லது விபத்தின் காரணமாகவோ மரணமடைவோரின்
விசாரணைகளை குறித்த பிரதேச மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றார்.
இந்த விசாரணையின் போது, இறந்த நபர் வசித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தை
சேர்ந்த அதிகாரிகளே சாட்சியங்களை நெறிப்படுத்துவதோடு, உரிய தகவல்களையும்
தெரிவிப்பது நடைமுறையில் உள்ளது.
இதனால், சடலங்களை ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக எனது கவனத்திற்கு
பலராலும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால், இறந்தவர்களின் உறவினர்களுக்கு அதிக
சிரமங்கள் மற்றும் துயரங்கள் ஏற்படுவதாகவும் என்னிடம்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களை போன்ற தூர
பிரதேசங்களில் நிரந்தர வசிப்பிடத்தை கொண்ட ஒருவர் கொழும்பு அல்லது கண்டி
போன்ற இடங்களிலுள்ள வைத்தியசாலையில் மரணமடைய நேரிடும் பொழுது அல்லது சடலம்
ஒப்படைக்கப்படும் பொழுது அவர் வசித்து வந்த பிரதேசத்தின் பொலிஸ்
நிலையத்திலிருந்து அதிகாரிகள் நேரில் வந்து திடீர் மரண விசாரணை அதிகாரி
முன்னிலையில் இறந்தவர் பற்றிய தகவல்களை வழங்கி, சாட்சியங்களை
நெறிப்படுத்துவதற்கு உதவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் அதிக காலதாமதம் ஏற்படுவது
உண்டு. குறிப்பாக, முஸ்லிம் இனத்தவரொருவர் இவ்வாறு மரணிக்கும் பொழுது அவரது
ஜனாஸா 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்வது பல சந்தர்ப்பங்களில்
இயலாத காரியமாக இருந்து வந்திருக்கிறது.
இதனால், ஜனாஸாக்கள் பழுதடைய கூடிய நிலைமைகளும் தோன்றியுள்ளதாக அறியக்
முடிகின்றது. இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படாதவாறு மரணிப்பவரின் சடலங்களை இயன்ற
வரை துரிதமாக உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவும்.
அதாவது, மரணம் சம்பவித்த அல்லது சடலம் வைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை
அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளின் நெறிப்படுத்தலின் கீழேயே
திடீர் மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி சடலங்களை இயன்ற வரை
விரைவாக உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு ஏற்ற விதத்தில் நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.