வீதியில்
தனியே சென்ற இளம்பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி இருவர் வன்புணர்வு செய்த
கொடூரம் தென்மராட்சியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
காமக் கொடூரர்கள் இருவரிடம் இருந்தும் ஒருவாறு தப்பி வீடு வந்து சேர்ந்த
அவர் இந்தச் சம்பவம் குறித்துப் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து
அவர்கள் பொலிஸாரிடம் முறையிட்டனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி பெண்
சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் 24 வயதானவர். அதிக உதிரப் போக்கும் காணப்பட்டதால்
அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டார்
என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாலை 5.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தான் வீதியில் நடந்து
வந்து கொண்டிருந்த போது நடுத்தர வயது மதிக்கத்தக்க இருவர் கத்தியைக் காட்டி
மிரட்டி தன்னைப் பற்றைக்குள் இழுத்துச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட பெண்
தெரிவிக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த இரு வாரங்களுக்குள் யாழ். குடாநாட்டில் இளம் பெண்கள்
வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும். நெடுந்தீவில்
13 வயதுச் சிறுமி ஒருத்தி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர்
கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். உரும்பிராய் சிறுவர் இல்லத்தில்
இருந்த மனநலம் குன்றிய சிறுமி ஒருத்தியும் வன்புணர்வுக்கு
உள்ளாக்கப்பட்டிருந்தார்.
அதிகரித்துவரும் இத்தகைய வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு சமூக
அமைப்புக்களும் சட்ட அமைப்புக்களும் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை
என்று மனித உரிமை ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.