அவுஸ்ரேலிய,
இலங்கை, இந்திய அணிகள் பங்குபற்றிய முக்கோண ஒருநாள் தொடர் கடந்த பெப்ரவரி
5ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இடம்பெற்றது.
அத்தொடரில்
அவுஸ்ரேலிய அணி வெற்றிபெற்றதோடு, இலங்கை அணி சிறப்பான போட்டியை
வழங்கியிருந்தது. இந்திய அணி சார்பாக சில வீரர்கள் சிறப்பாகப்
பிரகாசித்திருந்தனர். ஆகவே அத்தொடரின் ஆரம்பத்திலும், அத்தொடரின்
நிறைவிலும் வெளியிடப்பட்டுள்ள வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலின் ஒப்பீடு -
இத்தொடரில் வீரர்கள் எவ்வாறு பிரகாசித்திருக்கிறார்கள் என்பதற்கான
ஒப்பீடாக இது அமையும்.
துடுப்பாட்டம்
இறுதிப்போட்டிக்குப்
பின் வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில்
ஹசிம் அம்லா தொடர்ந்தும் முதலாம் இடத்தில் காணப்படுகிறார். இரண்டாவது
இடத்தில் ஏபி.டி.வில்லியர் காணப்படுகிறார். இந்தக் கால இடைவெளியில்
தென்னாபிரிக்க, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித்
தொடரும் இடம்பெற்றதன் காரணமாக இவர்கள் இருவரினதும் தரவரிசைப் புள்ளிகள்
அதிகரித்துள்ளன.
இத்தொடர்
ஆரம்பத்தில் 783 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தில் காணப்பட்ட விராத் கோலி, 7
தரவரிசைப் புள்ளிகள் அதிகரித்து தொடர்ந்தும் மூன்றாவது இடத்தில்
காணப்படுகிறார்.
இத்தொடரின்
ஆரம்பத்தில் 758 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்தில் காணப்பட்ட இந்திய அணியின்
தலைவர் மகேந்திரசிங் டோணி, அதே ஐந்தாவது இடத்தில் காணப்படுகின்ற போதிலும்,
14 தரவரிசைப் புள்ளிகளை இழந்துள்ளார். 6ஆவது இடத்தில் 757 புள்ளிகளோடு
காணப்பட்ட ஷேன் வொற்சன், போட்டிகளைத் தவறிவிட்டதன் காரணமாகவும் பங்குபற்றிய
ஒருசில போட்டிகளிலும் பெரிதாகப் பிரகாசிக்காத காரணத்தால் 48 புள்ளிகளை
இழந்து ஒன்பதாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
ஏழாவது
இடத்தில் 745 புள்ளிகளோடு காணப்பட்ட குமார் சங்கக்கார, அதே 745
புள்ளிகளோடு காணப்படுகின்ற போதிலும் நான்காவது இடத்திற்கு
முன்னேறியுள்ளார். எட்டாவது இடத்தில் 737 புள்ளிகளோடு காணப்பட்ட
அவுஸ்ரேலியாவின் மைக்கல் ஹசி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் 44
புள்ளிகளை இழந்து 11ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
715
புள்ளிகளோடு 9ஆவது இடத்தில் காணப்பட்ட மைக்கல் கிளார்க், சில போட்டிகளைத்
தவறவிட்டு புள்ளிகளை இழந்த போதிலும், விளையாடிய போட்டிகளில்
மிகச்சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் 11 புள்ளிகளை அதிகமாகப் பெற்று 8ஆவது
இடத்தில் காணப்படுகிறார்.
12ஆவது
இடத்தில் 686 புள்ளிகளோடு காணப்பட்ட இந்தியாவின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்
விரேந்தர் செவாக் 43 புள்ளிகளை இழந்து 24ஆவது இடத்திற்கு
பின்தள்ளப்பட்டுள்ளார்.
தொடர்நாயகன்
விருதுபெற்ற இலங்கையின் திலகரட்ண தில்ஷான் 670 புள்ளிகளோடு 14ஆவது
இடத்திலிருந்து 31 புள்ளிகளை மேலதிகமாப் பெற்று 10ஆவது இடத்தில்
தரப்படுத்தப்பட்டுள்ளார்.
653
புள்ளிகளோடு 17ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவின் கௌதம்
கம்பீர், 19 புள்ளிகளை மேலதிகமாகப் பெற்று 14ஆவது இடத்திற்கு
முன்னேறியுள்ளார். 21ஆவது இடத்தில் 644 புள்ளிகளோடு காணப்பட்ட இந்தியாவின்
நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், 31 புள்ளிகளை இழந்து 29ஆவது
இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
642
புள்ளிகளோடு 22ஆவது இடத்தில் காணப்பட்ட இலங்கை அணித்தலைவர் மஹேல ஜெயவர்தன,
18 புள்ளிகளைப் பெற்று 17ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். 580
புள்ளிகளோடு 35ஆவது இடத்தில் காணப்பட்ட உபுல் தரங்க, இறுதி இரண்டு
போட்டிகளில் சிறப்பாக ஆடியபோதும் முதல் 3 போட்டிகளில் மோசமாக
விளையாடியதாலும், ஏனைய போட்டிகளைத் தவறவிட்டதன் காரணமாகவும் 15 புள்ளிகளை
இழந்து 41ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
556
புள்ளிகளோடு 45ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் அன்ஜலோ
மத்தியூஸ், போட்டிகளைத் தவறவிட்டதன் காரணமாக பெரிதளவு புள்ளிகளைப்
பெறமுடியாது போனது. அவர் மேலதிகமாக 7 புள்ளிகளைப் பெற்று 42ஆவது இடத்தில்
தரப்படுத்தப்பட்டுள்ளார்.
488
புள்ளிகளோடு 64ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த தினேஷ் சந்திமால்,
தொடர் முழுவதும் வெளிப்படுத்திய சிறப்பான திறமை வெளிப்பாடுகள் காரணமாக 167
புள்ளிகளைப் பெற்று 18ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தொடரில்
கலக்கிய இன்னொரு வீரரான டேவிட் ஹசி, 76ஆவது இடத்தில் 461 புள்ளிகளோடு
காணப்பட்டு, 137 புள்ளிகளை மேலதிகமாகப் பெற்று 34ஆவது இடத்தில்
தரப்படுத்தப்பட்டுள்ளார்.
பந்துவீச்சு
பந்துவீச்சாளர்களைப்
பொறுத்தவரையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் சயீட் அஜ்மல், மொமட்
ஹபீஸ், லொன்வபோ சொற்சொபி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் காணப்பட்டனர்.
நியூசிலாந்துக்கெதிரான
சிறப்பான பந்துவீச்சுக் காரணமாக சொற்சொபி முதலாவது இடத்தைக்
கைப்பற்றியுள்ளார். அஜ்மல், மோர்னி மோக்கல், ஹபீஸ், டானியன் விட்டோரி,
ஷகிப் அல் ஹசன், ஸ்ரிவ் ஃபின் ஆகியோர் தொடர்ச்சியாக 2ஆவது, 3ஆவது, 4ஆவது,
5ஆவது, 6ஆவது, 7ஆவது, 8ஆவது இடங்களில் காணப்படுகின்றனர்.
இத்தொடரில்
பங்குபற்றியிராத அவுஸ்ரேலியாவின் மிற்சல் ஜோன்சன் 5ஆவது இடத்திலிருந்து
9ஆவது இடத்தில் பின்தள்ளப்பட்டுள்ளார். 9ஆவது இடத்தில் 660 புள்ளிகளோடு
காணப்பட்ட டக் பொலிஞ்சர் இத்தொடரில் பங்குபற்றாது 14ஆவது இடத்திற்கு
பின்தள்ளப்பட்டுள்ளார்.
இத்தொடரில்
பெரியளவில் சிறப்பாகப் பிரகாசித்திருக்காத இலங்கையின் லசித் மலிங்க, 648
புள்ளிகளோடு 10ஆவது இடத்திலிருந்து, 30 புள்ளிகளை இழந்து 17ஆவது இடத்திற்கு
பின்தள்ளப்பட்டுள்ளார்.
13ஆவது
இடத்தில் 627 புள்ளிகளோடு காணப்பட்ட இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, 34
புள்ளிகளை இழந்து 27ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். 621
புள்ளிகளோடு 15ஆவது இடத்தில் காணப்பட்ட பிரட் லீ, 14 புள்ளிகளை இழந்து
20ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
614
புள்ளிகளோடு 19ஆவது இடத்தில் காணப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 33 புள்ளிகளை
மேலதிகமாகப் பெற்று 10ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். 27ஆவது
இடத்தில் 594 புள்ளிகளோடு காணப்பட்ட ஹர்பஜன் சிங், 31ஆவது இடத்தில் 568
புள்ளிகளோடு காணப்பட்ட அஜந்த மென்டிஸ் ஆகியோர் இத்தொடரில் பங்குபற்றாததன்
காரணமாக முறையே 29ஆவது மற்றும் 37ஆவது இடங்களுக்கு பின்தள்ளப்பட்டுள்ளனர்.
30ஆவது
இடத்தில் காணப்பட்ட பிரவீன் குமார் அவரது 569 புள்ளிகளிலிருந்து 9
புள்ளிகளை இழந்து 34ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். 32ஆவது
இடத்தில் 565 புள்ளிகளோடு காணப்பட்ட ஷகீர் கான் 2 புள்ளிகளைப் பெற்று
30ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
541
புள்ளிகளோடு 34ஆவது இடத்தில் காணப்பட்ட நுவான் குலசேகர, 26 புள்ளிகளைப்
பெற்று 30ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 36ஆவது இடத்தில் 532
புள்ளிகளோடு காணப்பட்ட ஷேன் வொற்சன், 64 புள்ளிகளை மேலதிகமாகப் பெற்று
25ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
தொடரில்
பங்குபற்றிய ஏனைய பந்துவீச்சாளர்களில் ஷேவியர் டொகேர்ட்டி 43ஆவது
இடத்திலிருந்து 30ஆவது இடத்திற்கும், கிளின்ட் மக்காய் 51ஆவது
இடத்திலிருந்து 28ஆவது இடத்திற்கும், திஸ்ஸர பெரேரா 53ஆவது இடத்திலிருந்து
56ஆவது இடத்திற்கும், முதல் 100 பந்துவீச்சாளர்களுக்குள் இடம்பெற்றிராத
ரங்கன ஹேரத் தற்போது 50ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆகவே
இத்தொடரைப் பொறுத்தவரை துடுப்பாட்ட வீரர்கள் தரப்படுத்தில் அதிகளவிலான
முன்னேற்றத்தையும், பந்துவீச்சாளர்கள் தரப்படுத்தலில் பெரியளவிலான
முன்னேற்றத்தைக் கண்டிராத பண்பையும் காணமுடிகிறது.