வளமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளில்
மக்களுக்கு மகுடம் சூட்டுவது ஒருபுறம் இருக்கையில் அவர்களது மின்சாரக்
கதிரைக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு பல்வேறு விடயங்கள் நாட்டில்
இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவிக்கின்றார்.
கடந்த சில தினங்களாக மஹமோதர
வைத்தியசாலையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதற்கு மற்றுமொரு உதாரணம்
என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத காலத்திற்குள் பக்டீரியா தாக்கம் ஒன்றின் காரணமாக
மஹமோதர வைத்தியசாலையில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை
சுட்டிக்காட்டியுள்ள சஜித் பிரேமதாஸ, அதனை சிறிதாக கருத முடியாத எனவும்
குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் சுகாதாரதுறை தொடர்பில் பாரிய பிரச்சினைகள்
எழுந்துள்ளமை புலனாவதாக சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் பிரசவத்தின்போது
தாயொருவர் உயிரிழந்த சம்பத்தை நினைவுபடுததியுள்ள சஜித், தரமற்ற மருந்து
வழங்கப்பட்டமையே மரணத்திற்கு காரணம் என வைத்தியசாலை அதிகாரிகள் எடுத்துக்
கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்காக செயற்படும் அரசாங்க வைத்தியசாலைகள் உரிய தரத்தில்
முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு தரமான மருந்துகளை வழங்குவதற்கு
அரசாங்கம் அக்கறை செலுத்துவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிருமிகளை கட்டுப்படுத்துவதில் உள்ள இயலாமை காரணமாக அண்மைக்காலமாக பல
வைத்தியசாலைகளின் சத்திரசிகிச்சைப் பிரிவுகள் மூடப்பட்டமையினால் நோயாளர்கள்
பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஜெனீவா விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தி நாட்டின்
தற்போதைய பிரச்சினைகள் குறித்து மக்களின் கவனத்தை திருப்புவதற்கு அரசாங்கம்
முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்துகின்றார்.

