அமைச்சரின்
உத்தரவில் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காகப் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட
குடும்பம். உதவிகளின்றி தவிப்பு. ஆனந்தன் எம்.பி கண்டனம்
வவுனியா
பாரதிபுரத்தில் விக்ஸ் காட்டு அருகில் சுமார் 40 வருடங்களாக வசித்து வந்த
ஒரு குடும்பத்தை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் உத்தரவுக்கமைய பொலிசாரும்
அயல் ஊரைச் சேர்ந்த இளைஞர்களும் பலவந்தமாக வெளியேற்றியுள்ள சம்பவம்
குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
சிவசக்தி ஆனந்தன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
கணவனை
இழந்த 7 பிள்ளைகளைக் கொண்ட கணபதி புனிதவதி என்ற குடும்பப் பெண்ணிற்கே இந்த
கொடுமை நிகழ்ந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாவது:
வவுனியா
பாரதி புரத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு
அருகில் கணபதி புனிதவதி என்ற பெண் தனது கணவனுடனும் 7 பிள்ளைகளுடனும்
வசித்து வந்தார். சுமார் 40 வருடங்களுக்கு முன்னர், எழுபதாம் ஆண்டளவில்
பாரதிபுரத்தில் காட்டை வெட்டிச் சுத்தம் செய்து 2 ஏக்கர் காணியில் இந்தக்
குடும்பம் வசித்து வந்தது. கூலித்தொழில் செய்து வந்த கணவன் கண்களில்
சுண்ணாம்பு பட்டதையடுத்து பார்வையிழந்ததையடுத்து, தற்கொலை செய்து கொண்டார்.
கணவன் இறந்ததன் பின்னர் கூலி வேலை செய்து தனிமையில் தனது பிள்ளைகளுடன்
வசித்து வந்த இந்தப் பெண்ணின் குடும்பமே அமைச்சர் ரிசாட் பதியுதீனின்
உத்தரவுக்கமைய பொலிசாரினாலும், அயல் கிராமமாகிய புளிதறித்த புளியங்குளம்
கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களினாலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
கொட்டும்
மழையில் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் போது, தனக்கு
ஒருநாள் அவகாசம் கேட்டு அந்தப் பெண் பொலிசாரின் கால்களிலும், அந்த
இளைஞர்களினது கால்களிலும் வீழ்ந்து கெஞ்சிக் கேட்டும் அவர்கள் மனம்
இறங்கவில்லை. இது அமைமச்சரின் உத்தரவு என்பதால் தங்களால் ஒன்றும் செய்ய
முடியாதிருக்கின்றது என்று பொலிசார் அப்போது தெரிவித்தார்களாம். இருந்தும்
அந்தப் பெண் தானாக காணியைவிட்டு வெளியேற மாட்டார் என்பதற்காக, அவரது
வீட்டைப் பிரித்த பொலிசாரும் அந்த இளைஞர்களும் வீட்டில் இருந்த பொருட்கள்
மற்றும் கம்பு தடிகள் என்பவற்றை வீதியில் கொண்டு போட்டார்களாம்.
ஆயல்
கிராமமாகிய புளிதறித்தபுளியங்குளத்தின் பொது மைதானத்தை விஸ்தரிப்பதற்காகவே
இந்தப் பெண்ணுடைய காணி 2 ஏக்கரையும் அந்த ஊர் இளைஞர்களுக்கு அமைச்சர்
ரிசாட் பதியுதீன் இவ்வாறு பலவந்தமான நடவடிக்கையின் மூலம் பெற்றுக்
கொடுத்துள்ளார்.
காணியில்
இருந்து விரட்டப்பட்ட அந்தப் பெண் தனது பிள்ளைகளுடன் அயலவர் ஒருவருடைய
வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தார். இவருக்கு உதவியாக ஊர் கிராமசேவை அதிகாரி
200 ரூபா பணம் அப்போது வழங்கினார். சேவாலங்கா நிறுவனம் 2000 மூபா
பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்கியது.
இந்தச்
சம்பவம் பற்றி அறிந்த வவுனியா பிரதேச செயலக அதிகாரிகள் அங்கு சென்று
பார்வையிட்டதுடன். அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டாரிடம், ஒரு வார
காலத்திற்கு அந்தக் குடும்பம் அங்கேயே தங்கியிருக்க உதவுமாறு கூறியதுடன்,
பாரதிபுரம் கிராமத்தின் பொதுக்காணியாகிய காட்டுப்பகுதியில் ஓர்
இடத்தைக்காட்டி அதில் கொட்டில் போட்டு இருக்குமாறு கூறியுள்ளனர்.
இப்போது
அந்தப் பெண் அந்தக் காட்டுக்காணியைச் சுத்தம் செய்து தற்காலிக வீடு
ஒன்றில் தங்கியிருக்கின்றார்; அமைச்சரினால் அடாவடித்தனமாக வெளியேற்றப்பட்ட
அந்தக் குடும்பத்திற்கு எந்த உதவியும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.
தனக்கு
வழங்கப்பட்டுள்ள இடத்திலேயே, தான் இழந்துள்ள தனது காணி 2 ஏக்கருக்குப்
பதிலாக 2 ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும். மீள்குயேற்றத் திட்டத்தில் தனது
குடும்பம் உள்வாங்கப்பட்டு, வாழ்வாதார உதவிகள், வீடமைப்பு உதவிகளை
வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தனது
குடும்பத்தின் தற்போதைய வறுமை நிலைமையைப் போக்குவதற்கு உரிய வாழ்வாதார
வசதிகள் கிடைக்கும் வரையில் நிவாரணமாக உலருணவு உதவி வழங்கப்பட வேண்டும்
என்று அந்தப் பெண் கோரியிருக்கின்றார்.
பொதுத்
தேவைக்காக தனியார் காணியை அடாவடித்தனமாகக் கைப்பற்றியுள்ள அமைச்சர் ரிசாட்
பதியுதீன் இத்தகைய மனிதாபிமானமற்ற, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை
உடனடியாகக் கைவிட வேண்டும். அத்துடன் அமைச்சரும், பிரதேச செயலக
அதிகாரிகளும் நர்க்கதியாகியுள்ள இந்தக் குடும்பத்தின் எதிர்காலத்தைக்
கருத்திற் கொண்டு அவருக்கு உரிய உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.