தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: 3 மாதங்களுக்குப் பிரச்சினை இல்லை ஆனால் 6 மாதத்தில்..?

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: 3 மாதங்களுக்குப் பிரச்சினை இல்லை ஆனால் 6 மாதத்தில்..?தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தம்புள்ளையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டமொன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக இனாமலுவே சுமங்கள தேரர் கூறியுள்ளார்.

1982 ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட புனிதப் பிரதேசத்தின் திட்ட வரைபடத்தில் முஸ்லிம் பள்ளிவாசலோ, இந்துக் கோவிலோ இருக்க வில்லை என்று கூறிய சுமங்கள தேரர், அந்த வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 20ம் திகதி தான் தலைமை தாங்கி நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் போது வன்முறைத் தனமாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும் அவர் கூறினார்.

ஊடகங்களே போலியான வீடியோ காட்சிகள் மூலம் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டதாகவும் சுமங்கள தேரர் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, ஜனாதிபதியின் வேண்டுகோளின்படி, தம்புள்ளைப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சுமங்கள தேரரையும் முஸ்லிம் பள்ளிவாசல் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

வரும் மூன்று மாதங்களுக்கு குறித்த பள்ளிவாசலில் வழிபாடுகளை நடத்துவதில் பிரச்சினை இருக்காது என்று சுமங்கள தேரர் தன்னிடம் உத்தரவாதம் அளித்துள்ளதாக அமைச்சர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிவாசலை குறித்த இடங்களிலிருந்து அகற்றுவது குறித்து பள்ளிவாசல் பிரதிநிதிகளும் முஸ்லிம் மத பிரமுகர்களும் பிரதேச மக்களுமே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now