தம்புள்ள
புனிதப் பிரதேசத்தில் இருந்து பள்ளிவாசலை அகற்றும் முடிவில் பிரதமரும்,
பௌத்த பிக்குகளும் ஒன்றிணைந்து தீவிரமாகச் செயற்படும் நிலையில்,
அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் நெருக்கடியைச்
சந்தித்துள்ளன.
சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தேசிய
காங்கிரஸ் என்று பல முஸ்லிம் அரசியல் கட்சிகள் மகிந்த ராஜபக்ச அரசில்
இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளன.
தம்புள்ள
பள்ளிவாசல் விவகாரத்தில் அரசாங்கம் முஸ்லிம்களை நீதியற்ற வகையில்
நடத்துவதாகவும், இந்த விடயத்தில் ஜனாதிபதி மகிந்த திடமான முடிவை எடுக்க
வேண்டும் என்று முஸ்லிம் கட்சிகள் கோரியுள்ளன.
ஜனாதிபதி
உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கத்துடன் இணைந்திருப்பது
தற்கொலைக்கு ஒப்பானதாகி விடும் என்று இந்தக்கட்சிகள் கருதுகின்றன. இதன்
காரணமாக அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் கட்சிகள் முடிவு
செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த முடிவை எடுக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த
விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் தமது அமைச்சுப் பொறுப்புகளை பாதுகாக்கும்
வகையிலேயே, அரசாங்கத்துடன் சமரசம் செய்வதில் தீவிரம் காட்டுவதாகவும்
கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே,
ஆளும்கட்சியில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அங்கம்
வகிக்கும் முஸ்லிம்களும் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் எதுவும் செய்ய
முடியாத கையறு நிலைக்குள்ளாகியுள்ளனனர் என்பது குறிப்பிடத்தக்கது.