வடக்கு, கிழக்கு
வீடமைப்பு மீள் நிர்மாணத்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில்
தற்போது 49 ஆயிரத்து 507 வீடுகளின் நிர்மாண வேலைகள் முடிவடைந்து அவை
பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்று திட்டப் பதில் பணிப்பாளர்
க.தெய்வேந்திரம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
உலக வங்கி, பொருளாதார அபிவிருத்தி
அமைச்சு ஊடாக இந்தத்திட்டத்துக்கு நிதியை வழங்கியிருந் தது. தலா 3 லட்சத்து
25 ஆயிரம் ரூபா இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும்
வழங்கப்பட்டு அவர்களுடைய பங்களிப்பையும் இணைத்து இந்த வீடுகள்
நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு மாகாணங்களுக்குமான
வீடமைப்பு ஒதுக்கீடு 50 ஆயிரத்து 91 ஆகும். எனினும் 572 பயனாளிகளுக்கான
வீடமைப்பு உதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மீளக்குடியமராமை, இந்தியா வுக்குப்புலம்
பெயர்ந்தமை, பகுதி வீட்டுடன் காணி விற்கப்பட்டமை, உள்ளூர் இடப்பெயர்வு,
காணிப் பிணக்கு, பயனாளிகளின் இறப்பு, கட்டிய வீடுகள் போரினால் அழி வுற்றமை,
மிகவும் நலிவடைந்தமை ஆகிய 8 காணரங்களுக்காகவே இவை இரத்துச்
செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 73
பயனாளிகளுக்கும், கிளிநொச்சி மாவட்டதில் 167 பயனாளிகளுக்கும், வவுனியா
மாவட்டத்தில் ஒரு பயனாளிக்கும், மன்னார் மாவட்டத்தில் 42 பயனாளிகளுக்கும்,
திருகோணமலை மாவட்டத்தில் 119 பயனாளிகளுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில்
170 பயனாளிகளுக்கும் வீடமைப்பு உதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத் தில் 13 ஆயிரத்து
269 வீடுகளும், கிளிநொச்சியில் 5 ஆயிரத்து 335 வீடுகளும் முல்லைத்தீவில் 2
ஆயிரத்து 920 வீடுகளும், வவுனியாவில் 2 ஆயிரத்து 142 வீடுகளும், மன்னாரில் 3
ஆயிரத்து 431 வீடுகளும் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. இதே போல கிழக்கு
மாகாணத்தில் திருகோணமலையில் 6 ஆயிரத்து 394 வீடுகளும், மட்டக்களப்பு
மாவட்டத்தில் 11 ஆயிரத்து 441 வீடுகளும், அம்பாறையில் 4 ஆயிரத்து 575
வீடுகளும் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய
மாவட்டங்களின் நிர்மாண வேலைகள் நூறு வீதம் நிறைவடைந்துள்ளன. அத்துடன்
முற்றாகச் சேதமடைந்த மற்றும் பகுதியளவாகச் சேதமடைந்த 50 ஆயிரத்து 79
வீடுகள் புனரமைப்புச் செய்யப்பட்டு நிர்மாண வேலைகள் நிறைவடையும் நிலையில்
உள்ளன என்றார்.
|
வடக்கு கிழக்கில் இதுவரை 49,507 வீடுகள் நிர்மாணம்; உலக வங்கியின் உதவியுடன்
Labels:
இலங்கை